சீனாவில் படைத்த சாதனையை ஜப்பானில் உடைக்குமா இந்தியா?உற்றுநோக்கும் விளையாட்டு உலகம்!

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி: 501 இந்திய வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
ஆசிய விளையாட்டு
ஆசிய விளையாட்டு
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் (Aichi-Nagoya) செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 43 வகையான விளையாட்டுகளில் 469 பதக்கங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக சர்பிங், டெக்பால் அறிமுகமாக உள்ளன. 35 போட்டிகளில் இந்தியா சார்பில் 267 வீரர்களும் 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் பதக்க வேட்டைக்கு தயாராக உள்ளனர்.

கடந்த 1951-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் சீசன் நடைபெற்றது. தற்போது ஜப்பானில் 20-வது சீசன் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டித் தொடர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறது.

அய்ச்சி - நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வச் சின்னமாக (Mascot), புலி தலையும் கெண்டை மீன் உடலும் கொண்ட 'ஷாஜிஹோகா' (Shajihoko) என்ற ஜப்பானிய புராண உயிரினத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஹோனோஹான்’ (Honohon) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்போட்டியின் லோகோவில் சிறிய வடிவிலான சூரியன் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் உள்ள மூன்று வண்ணங்களில், ஊதா (Purple) நிறம் ‘ஐரிஸ் லேவிகேட்டா’ (Iris laevigata) என்ற மலரையும், தங்க நிறம் நகோயா கோட்டையின் அடையாளமான ‘ஷாஜிஹோகோ’வையும், பச்சை நிறம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சு நகரில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடம் பிடித்தது.இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 106 ஆகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியை இதுவரை 9 நாடுகள் நடத்தியுள்ளன. தாய்லாந்து அதிகபட்சமாக 4 முறை (1966, 1970, 1978, 1998) நடத்தி முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் தற்போது 3-வது முறையாக இப்போட்டியை நடத்தவுள்ளதன் மூலம், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் (தலா 3 முறை) 2-வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தியா 2 முறையும் (1951, 1982), இந்தோனேசியா 2 முறையும், பிலிப்பைன்ஸ், ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் இப்போட்டியை நடத்தியுள்ளன.

asian games 2026
asian games 2026source:zee news

இந்திய நட்சத்திரங்களின் களமிறக்கம்:

  • ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஆண்கள் T20 கிரிக்கெட் அணி இத்தொடரில் களமிறங்குகிறது.

  • துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர், வாள்சண்டையில் பவானி தேவி, ஜிம்னாஸ்டிக்ஸில் பிரணதி நாயக், ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் மற்றும் தான்வி ஆகியோர் பதக்கம் வெல்லக் காத்திருக்கின்றனர்.

  • பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் அந்திம் பங்கால் மற்றும் தீபக் புனியா ஆகியோர் முத்திரை பதிக்கும் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

  • ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா காயத்தால் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக யஷ்விர் சிங் களமிறங்குகிறார்.

ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியாவுக்கு 183 தங்கம் 238 வெள்ளி 357 வெண்கலம் என மொத்தம் 778 பதக்கங்கள் கிடைத்துள்ளன.அதிகபட்சமாக 106 பதக்கங்களுடன் கடந்த முறை சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது

தற்போது 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புவோம்.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமா பேசத் தயங்கிய சேல்ஸ்மேன் வாழ்க்கை: 'கோல்ட் கால்' படம் எப்படி இருக்கு?
ஆசிய விளையாட்டு
logo
Kalki Online
kalkionline.com