ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல், தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியினருக்கு அதிர்ச்சியையும், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறார். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். இந்திய அணியின் ருதுராஜ் அடித்த சதமும் வீணானது. இறுதியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
கிளென் மேக்ஸ்வெல், கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறார். ஆனாலும், விளையாட்டில் அவர், எதிராளிகளுக்கு பயங்கர அச்சுறுத்தலாகவே இருக்கிறார். அணியில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்றாலே எதிரணியினர் நிம்மதியாக தூங்க முடியாது.
உலக கோப்பை போட்டித் தொடரிலிருந்தே மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். தில்லியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் மின்னல் வேகத்தில் 40 பந்துகளில் சதம் அடித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 201 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றிபெற வைத்தார். தொடையில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர் மன உறுதியுடன் நின்று விளையாடினார்.
உலக கோப்பை போட்டியைத் தொடர்ந்து டி20 போட்டியிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் சரியாக விளையாடாவிட்டாலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டினார். டி20 போட்டியில் நான்காவது முறையாக சதம் அடித்து ஆஸ்திரேலிய அணி ஐந்துவிக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். அவரது அதிரடி ஆட்டம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமல்ல, அடுத்து நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.