
கிரிக்கெட் வரலாற்றில் தனிப்பட்ட வீரராகவும், ஒட்டுமொத்த அணியாகவும் இந்தியாவின் சாதனைகள் ஏராளமாக உள்ளன. அதேபோல் ஒருசில கசப்பான சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி சில வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையையே இழந்துள்ளனர். அவ்வகையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தடை செய்யப்பட்ட இந்திய வீரர்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவாக சூதாட்டம் என்பது தவறான மற்றும் மோசமான பழக்கமாகும். ஒருமுறை சூதாட்டத்தில் விழுந்து விட்டால், அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அப்படியே மீண்டு வந்தாலும், அதற்குள் வாழ்க்கையில் பாதி நாட்களை இழந்திருப்போம். உலகளவில் பிரசித்திப் பெற்ற விளையாட்டுகளை வைத்து சூதாட்டம் நடைபெறுவது வழக்கமானது தான். ஆனால், விளையாட்டு வீரர்களே சூதாட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது? ஒருவேளை வீரர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதன்பிறகு விளையாட்டை நினைத்துக் கூட பார்க்க முடியாது அல்லவா. இந்த நிலைமை தான் இந்திய வீரர்களான முகமது அசாருதீன், ஸ்ரீசாந்த், அஜய் ஜடேஜா மற்றும் மனோஜ் பிரபாகர் ஆகிய நால்வருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார் எனக் கூறி அவருக்கு வாழ்நாள் தடையை விதித்தது பிசிசிஐ. தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் வாதாடி, பல ஆண்டுகளுக்குப் பின் தன் மீது சுமத்தப்பட்ட பழியை பொய் என நிரூபித்தார் அசாருதீன். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது. அவருக்கும் வயதாகி விடவே, மீண்டும் கிரிக்கெட்டை விளையாட முடியாமல் போனது.
அடுத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக போராடினார் ஸ்ரீசாந்த். இந்நிலையில் கடந்த ஆண்டு தான் போதிய சாட்சியங்கள் இல்லை எனக்கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட முடிவு செய்து பயிற்சியும் எடுத்தார். ஆனால், எந்த அணியும் இவரை ஏலத்தில் வாங்கவில்லை. ஆதலால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அவ்வப்போது கமெண்ட்ரி செய்து வருகிறார். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றதில் இவருக்கும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்டப் புகாரில் அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த அஜய் ஜடேஜா. இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார் எனக் கூறி 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது பிசிசிஐ.
அதற்கடுத்த படியாக மனோஜ் பிரபாகர் என்ற இந்திய வீரரும் சுதாட்டப் புகாரில் சிக்கி 4 ஆண்டுகள் தடையைப் பெற்றார்.
வீரர்கள் தங்கள் மேல் எந்தத் தவறும் இல்லை என பின்னாட்களில் நிரூபித்தாலும், புகார் சுமத்தப்படும் போது கிரிக்கெட் உலகில் அவர்களைப் பற்றிய அவதூறு பேச்சுகள் எழுவதை யாராலும் தடுக்க முடியாது. இருப்பினும் நீதிமன்றத்தில் போராடி குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பைப் பெறும் போது, விளையாட முடியாமல் போனாலும், சாதகமான தீர்ப்பு கிடைத்ததே என்று ஆறுதல் அடையலாம், அவ்வளவவே!