அதிரடி வீரர் Mr.360 மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினால்...?

AB de Villiers
Cricket
Published on

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ஏபி டிவில்லியர்ஸ். இவரது பல ஷாட் தேர்வுகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக விக்கெட் கீப்பரின் தலைக்கு மேல் சிக்ஸர் அடிப்பதில் இவர் வல்லவர். இதனாலேயே டிவில்லியர்ஸை Mr.360 பேட்ஸ்மேன் என அழைப்பார்கள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விராட் கோலியுடன் இணைந்து பல சீன்கள் விளையாடியுள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் உள்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெற்றார். இந்நிலையில் இவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போகிறார் என்ற பேச்சுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளன. ஒருவேளை டிவில்லியர்ஸ் மீண்டும் களம் கண்டால் எப்படியிருக்கும் என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஏபி டிவில்லியர்ஸ், 2005 இல் ஒருநாள் கிரிக்கெட்டிலும், 2006 இல் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகம் ஆனார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்கும் திறன் பெற்றவர் இவர். அனைத்து காலத்திற்கும் ஏற்ற மிகச்சிறந்த வீரர்களின் பட்டியலில் நிச்சயமாக டிவில்லியர்ஸின் பெயர் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 50, 100 மற்றும் 150 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்களை அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ்.

அதிரடிக்குப் பெயர் போன டிவில்லியர்ஸ், கண்கலங்கிய தருணத்தை யாராலும் மறக்க முடியாது. கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெளியேறிய போது டிவில்லியர்ஸ் உள்பட அனைத்து வீரர்களும் கண்கலங்கியது, இந்திய ரசிகர்களுக்கும் சோகமாக அமைந்தது. அதிலிருந்து மீண்டு வந்த டிவில்லியர்ஸ் மேலும் 3 ஆண்டுகள் கிரிக்கெட்டைத் தொடர்ந்தார். 2018 ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்ற போது, தென்னாப்பிரிக்கா அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அது பேரிழப்பாக அமைந்தது.

அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்பினால், நிச்சயமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் அவர் மீண்டும் களத்தில் இறங்க கடுகளவு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் ஐபிஎல் போன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 லீக் தொடரில் விளையாட ஆயத்தமாகி வருகிறார் என்ற பேச்சுகள் தற்போது எழுந்துள்ளன. அதாவது டிவில்லியர்ஸின் பிள்ளைகள், தந்தை மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். அதற்கேற்ப அவரும் விரைவில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் ரன் மெஷின் யார் தெரியுமா?
AB de Villiers

'பயிற்சியில் பந்தைத் தெளிவாக காண முடிகிறதா? பௌலர்களை திணறடிக்க முடியுமா என்று பரிசோதித்த பின்புதான் உள்ளூர் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பேன்' என சமீபத்தில் தெரிவித்தார் டிவில்லியர்ஸ். களத்திற்கு திரும்புவாரா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும் பயிற்சியில் ஈடுபடப் போவது உறுதி. விரைவில் டிவில்லியர்ஸ் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் காணலாம் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

அடுத்த வருடம் SA20 லீக் தொடரில் டிவில்லியர்ஸ் விளையாடினால், இத்தொடருக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். மீண்டும் டிவில்லியர்ஸ் பேட்டில் இருந்து இமாலய சிக்ஸர்களையும், வித்தியாசமான பேட்டிங்கையும் காண முடியும். அதோடு டிவில்லியர்ஸ்க்கு பந்து வீச பௌலர்கள் தடுமாறுவதையும் காண முடியும் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com