
1. ஒரே பந்தில் 17 ரன்கள் எடுத்த ஒரே வீரர்
2004-ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி மார்ச் 13ம் தேதி கராச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சோயிப் அக்தரின் பந்தில் ராணா நவேத் கேட்ச் கொடுத்து சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். இதற்கு பிறகு வீரேந்தர் சேவாக் பொறுமையாக விளையாடுவார் என்று பாகிஸ்தான் வீரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ராணா நவேத் வீசிய முதல் ஓவரில் 24 ரன்கள் எடுத்து தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார் சேவாக்.
தொடர்ந்து 11 ஆவது ஓவரை ராணா நவேத் வீசினார். முதல் பந்தை நோ பால் ஆக வீச அதில் பவுண்டரி அடித்தார் சேவாக். இதன் மூலம் 5 ரன்கள் கிடைத்தன. அடுத்த பந்தையும் நோ பால் ஆக வீச, அதையும் பவுண்டரிக்கு அனுப்பி 5 ரன்கள் எடுத்தார் சேவாக். இதனால் 11 ஆவது ஓவரின் முதல் பந்து வீசப்படாமலேயே 10 ரன்கள் கிடைத்தன. அடுத்ததாக மீண்டும் நோபாலாகவும், அதன் பின்னர் முதல் பந்தை ஒழுங்காகவும் வீசினார் ராணா நவீத்.
முதல் பந்தை ஒழுங்காக வீசிய பின்னர் 2 ஆவது பந்தை நோ பால் ஆக ராணா வீச, அதில் பவுண்டரி அடித்தார் சேவாக். அடுத்த பந்து நோபாலாக, 11 ஆவது ஓவரின் முதல் பந்தில் மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த வகையில் சர்வதேச போட்டியில் ஒரே பந்தில் 17 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் வீரேந்தர் சேவாக். இந்த சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.
2. இந்தியாவின் முதல் உடன்பிறந்த ஜோடி செஸ் கிராண்ட் மாஸ்டர்கள்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 2023 IV எல்லோபிரிக்கட் ஓபன் செஸ் (Elllobregat Open) போட்டியில் இரண்டு தொடர் வெற்றிகளின் மூலம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தைப் பெற்றார் வைஷாலி. இதன் மூலம், இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராகவும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் முதல் தமிழ் பெண் என்ற உயரிய அந்தஸ்தையும் வைஷாலி பெற்றார்.
முதல் முறையாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடி என்ற சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த அக்கா தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு நிகழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, தனது பன்னிரண்டாவது வயதிலேயே சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். அந்த சாதனையை 2018 இல் அவர் நிகழ்த்தியபோது அவர் பிறந்து 12 வருடங்கள் 10 மாதங்கள் 13 நாட்கள் ஆகியிருந்தன. அதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்
3. உலக சாம்பியன் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர்
ஹரியானாவைச் சேர்ந்த 25 வயதான நீரஞ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டிகளில் வல்லவர். இவர் ஏற்கனவே ஒலிம்பிக் சாம்பியன் ஆவார். இவர் ஏற்கனவே ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸுக்குப் பின்னால் யூஜின் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, உலகப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் ஏற்கனவே பெற்றிருந்தார்.
உலகக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்த நீரஜ், 2023லில் தங்கத்தை உச்சி முகர்ந்துள்ளார். அத்துடன், உலகச் சாம்பியன்ஷிப் தடகள வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
4. இந்தியா தனது முதல் மோட்டோஜிபி பந்தயத்தை நடத்தி சாதித்தது
மோட்டோஜிபி (மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ்) என்பது கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தய உலகளாவிய சாம்பியன்ஷிப் ஆகும், 2023 ம் ஆண்டு செப்டம்பர் 21 முதல் 24 வரை, இந்தியா தனது முதல் மோட்டோஜிபி பந்தயத்தை நொய்டாவில் புத்தா இண்டர்நேஷனல் சர்க்கியூட்டில் நடத்தியது. இது முன்பு 2011 முதல் 2013 வரை F1 பந்தயங்களை நடத்தியது. இந்தியாவின் முதல் மோட்டோ ஜிபியை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர். இது ஓர் சாதனையாக பார்க்கப்படுகிறது.
5. தொடர்ந்து வெற்றி பெற்று சாதிக்கும் ஆண்கள் கபடி அணி
1990 -ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தான், முதன் முதலாக கபடி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இது வரை நடந்த அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தான் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கபடி அணி, இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஆண்கள் கபடி அணி, தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.