
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டின் கீழ் பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இதனைப் போக்குவதற்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 1.48 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ரூ.5 இலட்சம் வரையிலான சிகிச்சைகள் அளிக்கப்படும். இதுதவிர ரூ.22 இலட்சம் வரை 8 உயர் ரக சிகிச்சைகளும் அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டையை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உணர்த்தும் விதமாக புதிய செயலி ஒன்றை சுகாதாரத் துறை வெளியிட உள்ளது. இதன்மூலம் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படும் என்ற தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். அடுத்த 3 வாரங்களில் இந்த செயலி செயல்பாட்டிற்கு வந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநர் எஸ்.வினீத் கூறுகையில், “பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை செயலி வழியாக அறிந்து கொள்ள முடியும். சிகிச்சை விவரங்கள் மற்றும் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தகுதியுள்ள அனைவரும் இந்த செயலிலேயே புதிய காப்பீட்டுத் திட்ட அட்டையைப் பெற விண்ணப்பிக்க முடியும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.
1,215 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 942 அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறலாம். கடந்த 4 வருடங்களில் இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரூ.5,500 கோடி மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுகாதாரத் துறையின் புதிய செயலி பயன்பாட்டிற்கு வந்தபிறகு, அது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.