குஜராத் வீரர் உர்வில் படேல் இந்தியாவிலேயே மிக குறைவான பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் குஜராத் மற்றும் திரிபுரா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் திரிபுரா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த நக்வஸ்வாலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பின் குஜராத் அணியில் களமிறங்கிய ஆர்யா தேசாய் மற்றும் உர்வில் படேல் இருவரும் சிறப்பான கூட்டணியில் விளையாடினார்கள். ஆர்யா நிதானமாக விளையாடிய நிலையில், உர்வில் படேல் அதிரடியாக விளையாடினார்.
15 பந்துகளிலேயே அரைசதம் விளாசிய உர்வில் படேல், அடுத்த 13 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன் மூலமாக 28 பந்துகளில் 12 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதம் விளாசினார்.
இதனால் வெறும் 10.2 ஓவர்களிலேயே குஜராத் அணி இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் உர்வில் சதம் அடித்ததன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே புதியதொரு சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2018ம் ஆண்டு சையத் முஷ்டக் அலி தொடரில் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதாவது 32 பந்துகளில் சதம் அடித்து இந்தியாவில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலை ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன் வரவில்லை.
கடந்த சீசனில் குஜராத் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், இந்தமுறை அவர் விடுவிக்கப்பட்டதன்மூலம் ஏலத்தில் அடிப்படை விலைக்காவது வாங்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. இப்போது இந்த சாதனைக்கு பிறகு எந்த அணி வேண்டுமென்றாலும், அவரை வாங்கி ஐபிஎல் தொடரில் பயன்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது.