சாம்பியன்ஸ் ட்ராபிக்காக இந்தியா பாகிஸ்தான் செல்லுமா அல்லது ஹைப்ரிட் முறையில் நடத்தப்படுமா என்ற கேள்விகள் நீடித்து வரும் நிலையில், இரண்டு நாட்களில் இதுகுறித்தான முக்கிய மீட்டிங் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.
50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
இன்னும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையில் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும், நாங்கள் இந்தியாவுக்கு போகவில்லையா? அதேபோல் இந்திய வீரர்களும் இங்கு வர வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த இரண்டு நாடுகளின் அரசியல் சூழ்நிலையாலேயே ஐசிசி இன்னும் சாம்பியன்ஸ் தொடர் அட்டவணையை வெளியிடவில்லை.
இந்தநிலையில் பாகிஸ்தானில் ஒரு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை விடுவிக்கக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கலவரத்தால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இலங்கை அணி ஒரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு மற்ற போட்டிகளை தள்ளி வைத்துவிட்டு உடனே நாடு திரும்பிவிட்டது.
இதனால், இந்திய அணி அங்கு செல்வதற்கான கொஞ்ச வாய்ப்பும் போய்விட்டது.
மேலும் இந்த சம்பவத்தால் ஐசிசி உடனடியாக ஒரு மீட்டிங் வைத்து ஒரு முடிவை எடுக்கவுள்ளது. அந்தவகையில் நவம்பர் 29ம் தேதி ஐசிசி ஒரு மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடக்குமா? அல்லது அரசியல் நெருக்கடிகளால் வேறு நாட்டிற்கு மாற்றப்படுமா? அல்லது இந்தியாவின் போட்டிகள் மட்டும் வெளி இடங்களில் நடத்தப்படுமா? பாகிஸ்தான் இதற்கு என்ன முடிவு எடுக்கும்? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிய வரும்.