ஒரு நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த வீரருக்கு ஹேர் ட்ரையர் பரிசு அளித்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.
கிரிக்கெட்டில் சில முக்கிய அவார்டுகள் உள்ளன. சிறப்பாக விளையாடும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதேபோல்தான், சதம் அடித்த வீரர்களுக்கும் ட்ராபி மற்றும் பரிசு தொகைகள் வழங்கப்படும்.
இந்தியாவில் எப்படி ஐபிஎல் தொடர் பிரபலமோ, அதேபோல் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பிரபலமாகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (PCB) 2015 இல் நிறுவப்பட்ட இந்த லீக், குறுகிய காலத்தில் நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது.
PSL இன் முதல் சீசன் 2016 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் சீசனில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆரம்பத்தில் ஐந்து அணிகளுடன் தொடங்கப்பட்ட PSL, 2018 இல் முல்தான் சுல்தான்ஸ் அணி இணைந்த பிறகு ஆறு அணிகளைக் கொண்டதாக விரிவடைந்தது. லாகூர் கலந்தர்ஸ், கராச்சி கிங்ஸ், பெஷாவர் ஸால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் உட்பட்ட ஆறு அணிகள் ஆகும்.
ஒவ்வொரு அணியும் இரட்டை ரவுண்ட்-ராபின் முறையில் லீக் ஆட்டங்களில் விளையாடும், மேலும் அதிக புள்ளிகள் பெற்ற முதல் நான்கு அணிகள் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறும்.
இந்த ஆண்டு PSL தொடர் ஏப்ரல் 11 அன்று தொடங்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இஸ்லாமாபாத் யுனைட்டட், கராச்சி கிங்ஸ், லாகூர் கலந்தர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸல்மி, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த 6 அணிகளில் ஒரே ஒரு வெளிநாட்டு கேப்டனாக கராச்சி அணிக்கு டேவிட் வார்னர் செயல்படுகிறார். கடந்த ஏப்ரல் 12 அன்று கராச்சி கிங்ஸ் அணி, முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிராக தனது முதல் லீக் ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஜேம்ச் வின்ஸ்-ஐ பாராட்டி ‘மிகவும் நம்பகமான வீரர்’ என்ற அடைமொழியுடன் ஹேர் டிரையர் பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த விடியோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.