தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வரைக்கும் அவருக்கு சாதகமாகத்தான் விதிகளும் மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் விரைவில் ஏலம் நடைபெறவுள்ளது. அதற்கான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஏற்கனவே நீக்கப்பட்ட ஒரு பழைய விதியை மீண்டும் கொண்டுவந்திருக்கின்றனர்.
அதாவது, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன இந்திய வீரர்களை அன்கேப்டு பிளேயர் என கூறி ஒரு ஐபிஎல் அணி தக்க வைத்துக் கொள்ளலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத வீரர்களுக்கு கொடுக்கும் அதே சம்பளத்தை இவர்களுக்கு கொடுக்கலாம். இந்த விதி ஏன் மீண்டும் இப்போது கொண்டுவரப்பட்டது? என்று புரியாமல் அனைவரும் குழம்பியிருக்கின்றனர்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டிருப்பதாக கூறி வருகின்றனர். இதுகுறித்து பலரும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார்.
“தோனி ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வரை அவருக்காக ஐபிஎல் விதிகள் மாற்றப்படும். தோனி ஒரு மிகப்பெரிய வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் சிஎஸ்கே அணிக்காக பலமுறை பதக்கங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் உண்டு. அதற்கேற்றவாரு அவரும் ஃபிட்டாக உள்ளார். நன்றாக விளையாடுகிறார். அவரால் களத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்காக ஐபிஎல் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்வதில் தவறேதும் இல்லை. தோனிக்கு இன்னும் மிகப்பெரிய வேல்யூ இருக்கிறது. தோனி ஒரு அணிக்கான வீரர் என்பதால், அந்த அணி என்ன எதிர்பார்க்கிறதோ அதையே செய்வார்.
அதனால் அன்கேப்டு பிளேயராக இந்த ஆண்டு ஐபிஎல் பிளேயர் ரீட்டென்ஷனிலும் அவர் தக்க வைக்கப்படுவார். அதற்காக அவருக்கு 4 கோடி மட்டுமே சம்பளம் கிடைக்கும். ஆனால், தோனியே தனக்கு பணம் தேவையில்லை அணிக்காக விளையாடினால் போதும் என்று சொல்கிறார். வேறு என்ன வேண்டும்? ஆகவேதான் தோனிக்காக இந்த விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது." என்று பேசியுள்ளார்.