

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி , 5 போட்டிகளைக் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி மூன்றாவது போட்டியையும் , மிகவும் அதிரடியான முறையில் விளையாடி வெற்றி பெற்றது. இந்திய அணியின் அதிவேகமான பேட்டிங்கை கண்டு நியூசிலாந்து அணி அரண்டு போனது. வெலிங்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூஸி அணியின் டிம் செய்பர்ட் 2 ரன்களில் அவுட் ஆனார். பின் ஆலன் மற்றும் டேரில் மிச்செல் இணைந்து அணியை மீட்டனர். இந்த கூட்டணி 10 சிக்சர்கள் அடித்து வானவேடிக்கை காட்டினார்கள். பின் ஆலன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் , கிளன் பிலிப்ஸ் 17 ரன்களில் வெளியேறினார். மிச்செல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார் , மறுபுறம் ஜாக்கோப்ஸ் 39 ரன்கள் எடுக்க 20 ஓவரில் நியூசி அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது.
199 - ஸ்கோரை இலக்காக கொண்டு விரட்டலைத் தொடங்கிய இந்திய அணி மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வைபவ் சூரியவன்சியும் , அபிஷேக் ஷர்மாவும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தனர். வைபவ் மற்றும் அபிஷேக் ஜோடி 7 ஓவர்களில் 133 ரன்களைக் குவித்து கிரிக்கெட் உலகை மலைக்க வைத்தது. இந்த கூட்டணி பவர் பிளேவில் மட்டும் 118 ரன்களைக் குவித்து நியூசியை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
வைபவ் சூரியவன்ஷி 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அவுட் ஆகி வெளியேறினார். 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் ஷர்மா சாதனை நிகழ்த்தினார் , அந்த சாதனையின் தாக்கம் குறையும் முன்னரே 35 பந்துகளில் சத்தமடித்து மற்றொரு சாதனையையும் நிகழ்த்தி காட்டினார். 11 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை அடித்து 113 ரன்களை எட்டி அவர் அவுட் ஆனார். அபிஷேக் வெளியேறும் போது 10 ஓவர்களில் 178 ரன்களை இந்திய அணி எட்டி இருந்தது.
அடுத்த 21 ரன்கள் எடுக்க இந்திய அணிக்கு 3.2 ஓவர்கள் தேவைப்பட்டது. ஆயினும் இந்திய அணி 4 விக்கட்டுகள் இழப்புக்கு 13.2 ஓவர்களில் 199 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. கிட்ட தட்ட 6.4 ஓவர்களையும் மிச்சம் வைத்து பிரமிக்க வைத்தது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை வென்றது.
வேறு எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையாக 40-க்கும் குறைவாக பந்துகளில் மூன்று முறை சதமடித்து அபிஷேக் ஷர்மா சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளிலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளிலும் சதம் அடித்ததைத் தொடர்ந்து, நியூசிக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்துள்ளார். வெலிங்டன் போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்த அபிஷேக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.