
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் (Player of the Month)சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. இந்த முறை ஆண்கள் பிரிவில் இந்தியாவின் இரண்டு நட்சத்திர வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அதே சமயம் பெண்கள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மூன்று வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் இவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர்.
அந்த வகையில் வீரர்களுக்கான இந்த பட்டியலில் இந்தியாவின் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயின் பிரையன் பென்னட் ஆகியோர் இருந்தனர்.
இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற அபிஷேக் ஷர்மா செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 25 வயதான அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாதனை படைக்கும் வகையில் விளையாடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.
இவர் கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 3 அரைசதம் உள்பட 314 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருந்தது, இது சர்வதேச அளவில் அந்தத் தொடரில் அதிகபட்சமாகும். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வகையில் தொடர் நாயகன் விருதை இவர் தட்டி சென்றார். அதுமட்டுமின்றி அவரது இந்த அதிரடியான ஆட்டத்தின் காரணமாக, அவர் ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் 931 புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஆண்கள் டி-20 சர்வதேச வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச புள்ளியாகும்.
அதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தானின் சித்ரா அமின், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதே போல் சிறந்த வீராங்கனைக்கான விருதை, தென்ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ், பாகிஸ்தானின் சித்ரா அமின் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தட்டிச் சென்றார். விருதுக்குரிய மாதத்தில் மந்தனா 4 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 சதம் உள்பட 308 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 50 பந்தில் சதம் விளாசியதும் அடங்கும்.
ஆகஸ்ட் மாதத்தில் சிறந்த வீரருக்கான விருது முகமது சிராஜ்க்கும் அதேபோல் சிறந்த வீராங்கனையாக அயர்லாந்து 'ஆல்-ரவுண்டர்' ஆர்லாவுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.