சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இதன்படி 2024-ம் ஆண்டு முழுவதும் தனது ஆட்டத்தில் முதலிடத்தில் இருந்த பும்ராவைத் தவிர, ஜோ ரூட், ஹாரி புரூக், மற்றும் இலங்கையின் காமிந்து மென்டிஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருது இறுதிபட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து ஒருவர் வாக்கு கமிட்டி மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்.
2023-ல் தொடர்ச்சியான முதுகு காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா அதில் இருந்து மீண்டு டெஸ்ட் அரங்கிற்கு திரும்பி, 2024-ல் பந்துவீச்சு தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தினார்.
பும்ரா 2024-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி சராசரியாக 14.92 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 30.16 எடுத்துள்ளார். இது பந்துவீச்சாளருக்கான சிறந்த புள்ளிவிவரங்களாகும். உள்ளூர் மட்டுமின்றி கடினமான வெளிநாட்டு சீதோஷ்ண நிலையிலும் ஒரே மாதிரி சிறப்பாக பந்து வீசி வருவதாக ஐ.சி.சி. அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை தனதாக்கினார். இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் தான் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது மகத்தான சாதனையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
200 விக்கெட்டுகளை எடுப்பதற்கு அவர் 3,912 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்திய வகையிலும் பும்ராவுக்கே முதலிடம். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் ஜோயல் கார்னெர் 4,067 ரன்கள் வழங்கி இந்த மைல்கல்லை அடைந்ததே சாதனையாக இருந்தது.
ஜோ ரூட் இந்த ஆண்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் (17 டெஸ்டில் ஆடி 6 சதம் உள்பட 1,556 ரன்) முதலிடத்தில் உள்ளார். ஹாரி புரூக்கை எடுத்துக் கொண்டால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்தவர். காமிந்து மென்டிஸ் குறைந்த டெஸ்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளர்களின் பட்டியலில் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் 3-வது இடத்தை பகிர்ந்தவர். அதனால் 4 பேரில் யாருக்கு விருது கிடைக்கும் என்பதை கணிப்பது கடினம்.
கடந்த ஆண்டு இந்த விருதை இந்தியாவின் விராட் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.