
கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் வருமானம் கொட்டும் தொடராக ஐபிஎல் இருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சில வீரர்கள், எதிரணியை அச்சுறுத்தும் வகையில் அதிரடியாக விளையாடுவார்கள். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிரணிக்கு பயத்தைக் காட்டிய வீரர்கள் என்றால் வெகு சிலரே முன்வந்து நிற்பார்கள். அப்படி ஒரு வீரர்தான், இப்போதும் ஆபத்தான வீரராக இருக்கிறார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக வலம் வருகின்றன. இதில் சென்னை அணியில் நீண்ட காலமாக விளையாடி வரும் தோனி, சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். ஆனால் கீப்பிங்கில் மட்டும் இன்னும் அதே வேகம் தொடர்கிறது. இருப்பினும் அணியின் வெற்றிக்கு பேட்டிங் பங்களிப்பும் அவசியம் அல்லவா!
கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஃபினிஷர்களை எடுத்துப் பார்த்தால், நிச்சயமாக அதில் தோனியின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். பல போட்டிகளை நாட் அவுட் பேட்ஸ்மேனாக வெற்றியோடு முடித்துக் கொடுத்திருக்கிறார். தோனியின் சாதனைகளை எடுத்துப் பார்த்தால், நம்ப முடியாத வகையில் பல சாதனைகள் இருக்கும். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி, ரன் குவிக்காமல் இருப்பது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
தோனி மிகச்சிறந்த வீரர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் தோனிக்கு இருக்கிறது. எப்பேற்பட்ட வீரராக இருந்தாலும், கடினமான சூழலை சந்திக்க நேரிடும். இப்போது தோனிக்கு மிகவும் கடினமான காலம். காலில் அறுவை சிகிச்சை செய்த பின், தோனியால் முன்பு போல் நீண்ட நேரம் களத்தில் விளையாட முடிவதில்லை.
இருப்பினும் இதிலிருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை மட்டும் அவரிடத்தில் குறையவில்லை. நம்பிக்கையோடு தொடர்ந்து விளையாடும் அசாத்தியமான வீரர் தோனி. நிச்சயமாக தோனி மீண்டும் சென்னை அணிக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுப்பார்.
தோனி சரியாக விளையாடாத போதிலும், அவர் எதிரணிக்கு ஆபத்தான வீரர் என சமீபத்தில் ரிக்கி பாண்டிங் தொரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தோனியின் விக்கெட் கீப்பிங்கின் வேகம் இன்னும் குறையவில்லை. அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்பதை நிரூபிக்க இது ஒன்றே போதும். தோனி கடைசி கட்டத்தில் 10 முதல் 15 பந்துகள் வரையே சந்திக்கிறார். குறைந்த பந்துகளையே எதிர்கொண்டாலும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் தோனியிடம் உள்ளது. அவ்வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எதிரணிகளுக்கு எம்.எஸ்.தோனி ஆபத்தான வீரராகவே தொடர்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரைப் பொறுத்தே தோனியின் ஓய்வு முடிவு இருக்கும் என நினைக்கிறேன். கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதில் தோனிக்கு நிகர் தோனி மட்டுமே!” என பாண்டிங் பாராட்டியுள்ளார்.