ஐபிஎல் தொடரின் வணிக முகமா தோனி?

MS Dhoni
Dhoni
Published on

உலகளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் தவிர்த்து வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பெருமையாக கருதுகின்றனர். அப்பேற்பட்ட கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ரசிகர்கள் தான் என்றாலும், தோனியும் ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறார். ஏனெனில் தோனியை களத்தில் காண்பதற்காகவே இலட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகின்றனர்.

தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி, 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். தனது உடல்நிலை ஒத்துழைக்காத சூழலிலும் ரசிகர்களுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கடைசி நேரத்தில் களமிறங்கும் தோனி அதிகபட்சமாக 10 முதல் 15 பந்துகள் வரையே சந்திக்கிறார். விக்கெட் கீப்பிங்கில் வேகமாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் ரன்களைக் குவிக்கத் தடுமாறுகிறார். இருப்பினும் தோனி ஒரு ரன் எடுத்தாலும் சரி அல்லது சிக்ஸர் அடித்தாலும் சரி; ரசிகர்களின் சத்தம் மட்டும் குறைந்தபாடில்லை.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு, ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது. தோனிக்காக கிடைக்கும் இந்த வரவேற்பு, மறைமுகமாக ஐபிஎல் தொடரின் வணிகத்தை உயர்த்துகிறது. தோனியால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்பனையாகின்றன. ஒருவேளை தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றால், நிச்சயமாக ரசிகர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் சென்னை அணியின் வருமானம் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரின் வருமானமும் குறைய அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரே ஒரு வணிக ரீதியிலான தொடர் தானே. ஆனால் இவ்வளவு பெரிய தொடர் கூட ஒரு தனிவீரரை அதிகம் நம்பியிருப்பது பிரமிக்க வைக்கிறது.

தோனி ஓய்வு பெற்றாலும், அவர் நிச்சயமாக பயிற்சியாளராக பொறுப்பேற்பார். ஆகையால் ஐபிஎல் தொடரின் வருமானம் குறைந்தாலும், அதே வேகத்தில் அதிகரித்து விடும். ஏனெனில் கிரிக்கெட்டை தீவிரமாக ரசிக்கும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்களே! கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் கமெண்ட்ரி செய்பவர்கள் வரை அனைவருமே தோனியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அத்தனைப் புகழ்ச்சிக்கும் அவர் தகுதியானவர்தான் என்றாலும், சென்னை அணி சமீப காலமாக தோல்வியின் பாதையில் செல்வதையும் நாம் கவனிக்க வேண்டும்.

விக்கெட் கீப்பிங்கில் திறம்பட செயல்படும் தோனி, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கத் தவறுகிறார்.

'தோனி பேட்டிங் செய்ய வந்தால் மட்டும் போதுமென' வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்திருந்தார். 'ஐபிஎல் தொடரின் பெருமையே தோனி தான்; அவர் 11வது வீரராக கூட களத்திற்கு வரட்டும்; ஆனால் பேட்டிங் செய்ய வந்தாலே போதும்' என ரசிகர்களுடன் சேர்ந்து கிறிஸ் கெயிலும் சொல்லி விட்டார். இது தோனிக்கான பெருமை தான் என்றாலும், ஐபிஎல் நிர்வாகத்தின் வணிக யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.

இம்பேக்ட் பிளேயர் விதி கூட தோனிக்காக கொண்டு வரப்பட்டது தான் என சிலர் சொல்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் தோனி அடிக்கும் ஒற்றை சிக்ஸரைக் காண ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது மட்டும் ஆணித்தரமான உண்மை.

இதையும் படியுங்கள்:
எம்.எஸ்.தோனிக்கும் ஸ்வப்னில் குசாலேவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை?
MS Dhoni

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com