எப்படிப் பார்த்தாலும் இவர்தான் பெஸ்ட்! ஆனால், இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வொர்ஸ்ட்!

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

(வாட்ஸ்ஆப் செய்தி பகிர்விலிருந்து மொழிபெயர்ப்பு)

செயல்திறன் என்று வரும்போது சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை மிஞ்சும் அளவில் இந்தக் கிரிக்கெட் வீரர் இருக்கிறார். அசாத்திய எண்களை எட்டிப்பிடித்தும் பல சாதனைகள் புரிந்தும், இந்திய கிரிக்கெட்டில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வினைப் பற்றிதான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் நண்பர்களே.

2023 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்தியர். ஆனால், பிசிசிஐ அறிவித்த கிரிக்கெட் வீரர்களின் ஏ பிளஸ் பிரிவில் இவர் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது திறமையைக் காட்டிலும் அஸ்வினின் திறமை எந்த விதத்திலும் குறைவானது இல்லையே!

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்!

நீங்கள் வெறும் எண்களில் மட்டும் கணக்கிட்டால், 619 விக்கெட்டுகளை எடுத்த அணில் கும்ப்ளே, 507 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த அஸ்வினைவிட மேலாகத் தெரிவார். ஆனால், அவர் அஸ்வினைவிட 33 டெஸ்ட் மேட்ச்கள் அதிகமாக விளையாடியுள்ளார். இதை வைத்து ஒருவரது மகத்துவத்தை எவ்வாறு மதிப்பிடுவது?

நாம் ஒரு எளிய மெட்ரிக்கை உருவாக்குவோம். அதைப் போட்டியின் வெற்றிவிகிதம் என அழைப்போம். சரியான முடிவுக்கு வர, நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பந்துவீச்சாளரின் விக்கெட் சதவீதத்தைக் கணக்கிட்டுப் பார்க்கலாம். அதாவது அணி வென்ற ஆட்டங்களில் அந்த நபரால் எடுக்கப்பட்ட விக்கெட்டுகள், மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையில் வகுக்கப்பட வேண்டும். இது மிகவும் வெளிப்படையான அளவீடாக இருக்கும்.

ஷேன் வார்ன் ஏன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை இது நிரூபிக்கிறது. அவர் முரளியை விட 92 விக்கட்டுகள் குறைவாக எடுத்திருந்தாலும், ஷேனின் போட்டி வெற்றி விகிதம் 72% ஆகும். முரளியுடையது 54.75% மட்டுமே. ஹர்பஜன் சிங் 52.9%. கும்ப்ளே 46.5%. நாதன் லயன் 60.3%. அஸ்வின் 69.8%. ஷேன் வார்னுக்குப் பிறகு அடுத்த சிறந்த நபர்! எனவே சந்தேகத்திற்கு இடமின்றி அஸ்வினே இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அனைத்து நிலப்பரப்புக்குமான சூப்பர் ஸ்பின்னர்! இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தது யார் என்று யூகிக்க முடியுமா? அது அஸ்வின்!

கிரிக்கெட் உலகின் பல நாடுகளிலும் சிறந்த பெர்ஃபாமன்ஸ் ஆற்றியது யார் என்பதை அறிய, மற்றொரு அளவீட்டை இப்போது பார்ப்போம். இதை Country Performance Index (CPI) என்று அழைப்போம். அதாவது ஒரு நாட்டில் எடுக்கப்பட்ட விக்கட்டுகளின் எண்ணிக்கையை, விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையால் வகுப்பது.

இந்த புதிய அளவீட்டின்படி நாம் சென்றால், ஆஸ்திரேலியா, இந்தியா இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நாதன் லயனை விட அஸ்வின் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில், ஜடேஜாவை விட அவர் சிறந்தவர். அவர் மோசமாக பெர்ஃபாமன்ஸ் செய்த/செய்யும் இடம் தென்னாபிரிக்கா. இது அவரது பயணத்தில் சிறிய புள்ளி மட்டுமே. துரதிஷ்டவசமாக அவர் பாகிஸ்தானில் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.

சுவாரசியம் என்னவென்றால், அஸ்வின், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் கும்ப்ளேவை வீழ்த்துகிறார். ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஹர்பஜன் சிங்கை விட அஸ்வின் சிறந்து விளங்குகிறார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அஸ்வின், ஆசியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சில சமயங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மையில் அனைத்து நிலப்பரப்புக்குமானவர். இந்த மதிப்பீட்டின்படியும் அவர் ஒரு சாம்பியன்.

சூழலுக்கு சாதகமான டிராக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, சூழலுக்கு உதவாத இடங்களில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படும் ஸ்பின்னர்தான் நியாயமான முறையில் சிறந்த அனைத்து நிலப்பரப்புக்குமான ஸ்பின்னராக அறிவிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையிலும் கும்ப்ளே, ஜடேஜா மற்றும் ஹர்பஜன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளுகிறார் அஸ்வின்.

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

இந்தியாவின் சிறந்த வெற்றியாளர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஒரு வீரர் எத்தனை முறை தொடர்வீரர் விருதை பெற்றுள்ளார் என்பதைக் கணக்கிடுவதை விட சிறந்த வழி எதுவுமில்லை. இதை டெண்டுல்கர் 5 முறை வென்றார். சேவாக் குறைவாக ஒன்றும் இல்லை, அவரும் ஐந்து விருதுகள் வென்றார். கபில் தேவ், கும்ப்ளே, டிராவிட் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் நான்குமுறை கைப்பற்றினர். கிங் கோலி 3 முறை வென்றுள்ளார். ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இதில் எங்கும் காணவில்லை. இவர்கள் அனைவருக்கும் மேலாக, 10 விருதுகளுடன் The Greatest of All Time ஆக முதலிடத்தில் உள்ளார் அஸ்வின்!

இதையும் படியுங்கள்:
சரித்திரம் படைத்த கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் – ஜிம் லேக்கரின் (இன்றுவரை முறியடிக்கப்படாத) சாதனை!
Ravichandran Ashwin

God Level செயல்திறன் கொண்டவர்!

அஸ்வின் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது. 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்தியர் இவரே.

பும்ரா 34 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது இந்தியா Ga-Ga (உற்சாகம்) ஆனது. ஆனால் அஸ்வின் பல காலத்திற்கு முன்பே 29 டெஸ்ட் மேட்ச்களிலேயே இதை சாதித்துவிட்டார் என்பதை செய்தி சேனல்கள் குறிப்பிட மறந்துவிட்டன!

பேட்டிங்கிலும் அஸ்வினின் செயல்திறன் வெகுவாக ஈர்க்கக்கூடியது. அவர் 5 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், சஞ்சய் மஞ்சுரேகர், கிரிஷ் ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டீல், அஜித் வடேகர், விஜய் மெர்ச்சன்ட், வினோத் மன்காட், எம்.எல் ஜெய்ஸ்ம்ஹா, சலீம் துரானி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் ஆகியோரைவிட, அஸ்வின் அதிக டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரிந்தால், இவர் மீதான பிம்பம் உங்களுக்கு முற்றிலும் மாறிவிடும்.

வாசிம் ஜாபர், ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் போன்றவர்களை விட அஸ்வின் அதிக அரைசதம் அடித்துள்ளார்.

ரவி சாஸ்திரி, தன் சக ஊழியர்களை விட சிறப்பாக சிந்திக்க முடியும் என்பதால் ஒருமுறை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அஸ்வின் ஒரு சயின்டிஸ்ட் கிரிக்கெட் வீரராகக் கருதப்படுகிறார். அவரது மூளை ஆற்றலைக் கண்டு அனைவரும் வியக்கிறார்கள். கோலி கூட அதைப்பற்றி ஆவேசத்துடன் பதிவு செய்துள்ளார். ஆனால் இன்னும் ஒரு முறைகூட, கேப்டன் அல்லது துணைக் கேப்டன் பதவிக்கு அஸ்வின் நியமிக்கப்படவில்லை.

இந்தியா தனது சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான சுழற்பந்து வீச்சாளரை, அவரது 100 டெஸ்ட் போட்டியில் இன்னும் சிறப்பாகக் கொண்டாடியிருக்க வேண்டும்! ஒருவேளை அவர் மும்பையைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் தேசம் அவரை வித்தியாசமாக பார்த்திருக்குமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com