இடைவிடாத முயற்சிக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஆப்கானிஸ்தான் அணி!

Afghanistan Team
Afghanistan Team

கிரிக்கெட் உலகில் அனைத்து நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் இடைவிடாத முயற்சியின் பலனை விவரிக்கிறது இந்தப் பதிவு.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் சில பெரிய அணிகள் தான் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வரும். ஒரு சிறிய அணி பலம் வாய்ந்த பெரிய அணியுடன் மோதினால், பலரது வெற்றிக்கணிப்பும் பெரிய அணியின் பக்கம் தான் இருக்கும். அதற்கேற்ப சிறிய அணிகள் மிக எளிதாக வீழ்ந்து விடும். ஆனால், தற்போதைய கிரிக்கெட் காலகட்டத்தில் வரலாற்றைத் திருப்பி போடும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று எதுவென்றால், சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தும் ஆச்சரியம் தான். இவை அதிர்ஷ்டத்தால் நிகழ்பவை அல்ல; இடைவிடாத முயற்சியினால் நிகழ்பவை.

கடந்த சில ஆண்டுகளாக சிறிய அணிகள் பெரிய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பினை உலகக்கோப்பைத் தொடர்களில் தான் பெறுகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தோல்விகள் தான் அதிகம் இருக்கும். ஆனால், சமீப காலமாக இந்த அணியின் ஆட்டத்திறன் மேம்பட்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. சில போட்டிகளில் வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், எதிரணிக்கு எளிதான வெற்றியை மட்டும் கொடுக்க மாட்டார்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள். இதற்கு சான்றாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி கடைசி வரைப் போராடி வெறும் 4 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி பயத்தைக் காட்டி விட்டது என்றே சொல்லலாம்.

அதன்பிறகு, 2023 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை வென்று தங்களின் ஆட்டத்திறனை உலகுக்கு நிரூபித்தனர். அதே தொடரில் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு பயம் காட்டியே ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் ஒரே ஒரு கேட்ச்சை தவறவிட்டதால் போராடி தோற்றது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இம்முறை ஆப்கானிஸ்தான் அணியிடம் ஆஸ்திரேலியா தோற்று விடும் என்றே நினைத்தது. ஆனால், கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி தப்பித்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
"இடைவிடாத முயற்சி நிச்சயமாக வெற்றியைத் தரும்" - நம்பிக்கை ஊட்டும் கிரிக்கெட் வீரரின் வெற்றிக் கதை!
Afghanistan Team

ஆனால் இம்முறை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிக்கு தோல்வியைச் பரிசளித்து, வெற்றியைத் தன்வசப்படுத்தி இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கடந்த இரு உலகக்கோப்பையில் நழுவ விட்ட வெற்றியை இம்முறை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது ஆப்கானிஸ்தான் அணி.

நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சிறிய அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தான் பெரிய அணிகளுக்கு எச்சரிக்கை விடும்படியாக அமைந்துள்ளது இந்த வெற்றி. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கன் வீரர்களின் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துமே சிறப்பாக இருப்பதற்கு முக்கிய காரணமே இடைவிடாத பயிற்சியும், களத்தில் அவர்களின் தடையற்ற முயற்சியும் தான். உலகக்கோப்பை போட்டிகள் மட்டுமின்றி இருநாடுகளுக்கும் இடையேயான சர்வதேச போட்டிகளிலும் ஆப்கன் வீரர்களின் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது.

கிரிக்கெட்டில் அதுவும் உலகக்கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இதனை நிகழ்த்திக் காட்டி இருக்கின்றனர் சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணியினர். இனிவரும் காலங்களில் பெரிய அணிகள் சிறிய அணிகளை சிம்ம சொப்பனமாக நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால் அதுவே அவர்களின் பலவீனமாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com