
இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. கவுகாத்தியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
தற்போது ஆண்கள் கிரிக்கெட்டிற்கு நிகராக பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பிரபலமடைந்து வருவதால், அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பல மடங்கு உயர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு, அதாவது ஆண்கள் உலக போட்டியை விட அதிகமாக, இந்த போட்டிக்கான பரிசுத்தொகையை ரூ.122 கோடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடும் அணி ரூ.39½ கோடியை பரிசாக அள்ளி குவிக்க உள்ளது.
பரிசுத்தொகையை மட்டும் அதிகரிக்காமல், மற்றொரு அதிரடியாக பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் பணியாற்றும் நடுவர்கள் அனைவரும் பெண்களாக இருப்பார்கள் என ஐ.சி.சி. அறிவித்து, புதிய புரட்சியை செய்துள்ளது.
அதுமட்டுமின்றி பெண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அனைவரும் பெண் நடுவர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், 4 போட்டி நடுவர்கள் என அனைவரும் பெண்கள்.
இது குறித்து ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா கூறுகையில், ‘நடுவர் குழுவில் அனைவரையும் பெண்களாக நியமித்து இருப்பது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல், கிரிக்கெட் முழுவதும் பாலின சமத்துவத்தை கொண்டு வருவதில், ஐ.சி.சி.யின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வலுவான பிரதிபலிப்பாக பார்க்கிறோம். களத்தில் அவர்களின் செயல்பாட்டை காணும் போது, வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என்றார்.
அத்துடன் பெண் நடுவர்களுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நான்கு நடுவர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் இரண்டு பேர் (ஜனனி, காயத்ரி)தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, என்.ஜனனி, விருந்தா ரதி, காயத்ரி வேணுகோபாலன், ஜி.எஸ்.லட்சுமி (நான்கு பேரும் இந்தியா), லாரென் ஏகன்பேக், கெரின் கிளாஸ்டி (இருவரும் தென்ஆப்பிரிக்கா), கேன்டாஸ் லா போர்டே, ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கிம் காட்டன் (நியூசிலாந்து), சாரா தம்பனேவானா (ஜிம்பாப்வே), ஷதிரா ஜாகிர் ஜெசி (வங்காளதேசம்), கிளாரி போலோசக், எலோயிஸ் ஷெரிடான் (ஆஸ்திரேலியா), சூ ரெட்பெர்ன் (இங்கிலாந்து), நிமாலி பெரேரா (இலங்கை) ஆகியோர் களம் மற்றும் டி.வி. நடுவர்களாகவும், டிருடி ஆண்டர்சன் (நியூசிலாந்து), ஷான்ட்ரே பிரிட்ஸ், (தென்ஆப்பிரிக்கா), மிட்செல் பெரேரா (இலங்கை) ஆகியோர் போட்டி நடுவர்களாகவும் இருப்பார்கள் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.