

இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் 19வது ஐபிஎல் (IPL) போட்டிகள் மார்ச் 28, 2026ஆம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன . 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா முழுவதும் மொத்தம் 84 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கும் பெங்களூரு தொடக்க விழாவையும் இறுதிப்போட்டியையும் நடத்துகிறது. மேலும் தொடக்கப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
2008 ஏப்ரல் 18 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து முதல் ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது. இதுவரை நடைபெற்ற 18 தொடர்களிலும் ஒரு சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமல் உள்ளது . தற்போது நடைபெற இருக்கும் 19ஆவது ஐபிஎல் தொடரிலாவது இந்த சாதனை முறியடிக்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் அந்த சாதனை பின்வருமாறு.
பொதுவாக கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அணியில் இருந்து அன்றைய தினம் சிறப்பாக விளையாடிய ஒருவருக்கு 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வழங்கப்படும். ஆனால் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான அனில் கும்ப்ளே ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியில் இருந்து' மேன் ஆப் தி மேட்ச் விருது' பெற்றுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இரண்டாவது ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)மற்றும் டெக்கான் சார்ஜஸ்(DC) அணிகள் விளையாடின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளே விளையாடினார் .முதல் விளையாடிய டெக்கான் சார்ஜஸ் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது .
இதில் கும்ப்ளே சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட் சாய்த்தார். இரண்டாவதாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 144 என்ற இலக்கை எட்ட முடியாமல் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆனாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த கும்ப்ளே சிறப்பாக பந்து வீசியதால் இறுதிப் போட்டியில் 'மேன் ஆஃப் தி மேட்ச் விருது' அவருக்கு வழங்கப்பட்டது. இதுவரை 18 ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்து 19ஆவது தொடர் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் யாராலும் மீண்டும் செய்ய முடியாத அபூர்வ சாதனையாக இது உள்ளது.
நடப்பு தொடரிலாவது அனில் கும்ப்ளேவின் சாதனையை எந்த வீரராவது முறியடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.