டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ஆன்டி முர்ரே!

Andy Murray
Andy Murray
Published on

உலகில் பலரால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் டென்னிஸ் விளையாட்டும் ஒன்று. டென்னிஸ் உலகை ஆட்சி செய்த வீரர்களில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஆன்டி முர்ரேவும் ஒருவர். இவர் பாரிஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற இருக்கிறார். பல தோல்விகள், பல வெற்றிகள் என இரண்டையும் மாறி மாறி பெற்ற முர்ரேவின் டென்னிஸ் வாழ்வை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

இங்கிலாந்து நாட்டிற்காக டென்னிஸ் விளையாடினாலும், 1987 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் பிறந்தவர் தான் ஆன்டி முர்ரே. இவருடைய தாத்தா ராய் எர்ஸ்கின் ஸ்காட்லாந்து கால்பந்து வீரராக 1950-களில் கலக்கினார். சிறுவயதில் இருந்தே டென்னிஸ் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட முர்ரே, தனது இரு கைகளாலும் விளையாடக் கூடிய திறன் பெற்றவர். கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து டென்னிஸ் உலகை 2010 காலகட்டத்தில் இருந்து கலக்கிக் கொண்டிருந்தார் முர்ரே. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் 2010, 2011, 2013, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வி அடைந்துள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 2016 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை நழுவ விட்டார்.

இருப்பினும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும், 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தார் ஆன்டி முர்ரே. டென்னிஸ் வீரர்கள் பலரும் அவ்வப்போது மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் தொடர்ந்து 41 வாரங்கள் உலக டென்னிஸ் தரவரிசையில் முர்ரே முதலிடத்தில் நீடித்து சாதனையின் உச்சத்திற்கே சென்றார்.

ஒலிம்பிக் வெற்றி: முர்ரேவின் அயராத பயிற்சியினால் 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

இதையும் படியுங்கள்:
இந்திய ஹாக்கி அணியின் தடுப்பு சுவர்!
Andy Murray

பல டென்னிஸ் தொடர்களில் பங்கேற்று பல வெற்றிகளை தன்வசம் ஈர்த்த ஆன்டி முர்ரே பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து ஆன்டி முர்ரே கூறுகையில், “இங்கிலாந்திற்காக டென்னிஸ் விளையாடியது எனது தொழில்முறை வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வுகளாகும். கடைசியாக ஒருமுறை அதனைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பாரிஸ் ஒலிம்பிக்குடன் எனது டென்னிஸ் வாழ்வில் இருந்து விடைபெறுகிறேன்” என்று ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார்.

37 வயதாகும் ஆன்டி முர்ரே சுமார் 19 ஆண்டுகள் டென்னிஸ் விளையாடி வருகிறார். இவரது இந்த ஓய்வு முடிவு, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் விடைபெற முயல்வார் என எதிர்பார்க்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com