இந்திய ஹாக்கி அணியின் தடுப்பு சுவர்!

PR Sreejesh
PR Sreejesh
Published on

ஹாக்கியைப் பொறுத்த வரையில், கோல் போடுவதை விடவும் முக்கியமானது எதிரணியின் கோல்களைத் தடுப்பது. அவ்வகையில் எதிரணியின் கோல்களைத் தடுப்புச் சுவராக தடுத்து, இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பராக செயல்பட்டு வரும் பி.ஆர். ஸ்ரீஜேஷ் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இல்லை எனில் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கிழக்கம்பலம் என்ற கிராமத்தில் 1988 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் முதலில் தடகளத்தில் தான் ஆர்வமாக இருந்தார். நீளம் தாண்டுதல், ஸ்பிரிண்ட்ஸ் மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினார். இருப்பினும் இவரது தனித்திறனைக் கண்ட பயிற்சியாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ரமேஷ் கோலப்பா, ஸ்ரீஜேஷை ஹாக்கியில் களமிறக்கினர்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்திய U-21 அணியுடன் ஸ்ஜேஷின் ஹாக்கிப் பயணம் தொடங்கியது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது அபாரமான ஆட்டத்தால், 2006 ஆம் ஆண்டில் இந்திய ஹாக்கி அணிக்காக இலங்கையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு இந்திய அணியின் கோல் கீப்பராக சுமார் 328 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

2012 இல் லண்டன் ஒலிம்பிக், 2016 இல் ரியோ ஒலிம்பிக் மற்றும் 2020 இல் டோக்கியோ ஒலிம்பிக் என தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார். இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றதற்கு மிக முக்கியப் பங்காற்றியவர் ஸ்ரீஜேஷ்.

தற்போது நடப்பாண்டு 2024 இல் தொடங்கவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்க உள்ளார். இதில் விளையாடிய பிறகு தொடர்ந்து 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகி விடுவார் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்.

கிட்டத்தட்ட 18 வருடங்கள் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பராக செயல்பட்டு வரும் ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், வருங்கால இளைஞர்களுக்கு வழிவிட்டு ஹாக்கியில் தனது சகாப்தத்தை முடித்துக் கொள்ள இருக்கிறார். 2015 இல் அர்ஜூனா விருது, 2017 இல் பத்ம ஶ்ரீ விருது மற்றும் 2021 இல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அசுர வளர்ச்சியை நோக்கி மகளிர் கால்பந்து அணி!
PR Sreejesh

ஓய்வு குறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் “சர்வதேச ஹாக்கி விளையாட்டில் நான் எனது கடைசி அத்தியாயத்தில் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது மனம் முழுவதும் நன்றி உணர்வால் நிறைந்துள்ளது. என்னை முழுதாய் நம்பிய இந்திய அணி நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும், உடன் விளையாடிய வீரர்களுக்கும், ஆதரவளித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் நான் ஓய்வு பெறப் போகிறேன். இது ஒரு அத்தியாயத்தின் முடிவு மட்டுமல்ல ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமும் கூட” என்று தெரிவித்துள்ளார்.

கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் இடத்தை இந்திய ஹாக்கி அணியில் நிரப்பப் போவது யார் என்ற கேள்வி தான், இனி ஹாக்கி ரசிகர்களின் மனதில் எழக்கூடும்.

ஒரு சாதனை வீரர் ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் விடைபெற்றால் அதை விட ஆனந்தம் வேறென்ன. இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாழ்த்துகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com