இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் அனுஜ் ஸ்ரீவத்ரி!! செஸ் வரலாற்றில் புதிய மைல்கல்!

இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் அனுஜ் ஸ்ரீவத்ரி!! செஸ் வரலாற்றில் புதிய மைல்கல்!
அனுஜ் ஸ்ரீவத்ரி
அனுஜ் ஸ்ரீவத்ரிSOURCE: CHESSBASE.IN
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

வெற்றியை அடைவதற்கு திறமை மட்டும் போதாது; விடாமுயற்சியும் துணிச்சலும் தேவை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது அனுஜ் ஸ்ரீவத்ரியின் சாதனை. இந்திய செஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, 100-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் இவர். தீபாவளி திருநாளில் கிடைத்த இந்த சாதனைப் பரிசைப் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது அனுஜ் ஸ்ரீவத்ரி, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றதுடன், மத்தியப் பிரதேசத்தின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.

ஒன்பது சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் ஆட்டத்திலேயே தோல்வியைச் சந்தித்தார் அனுஜ். ஆனால், அந்தத் தோல்வியால் மனம் தளரவில்லை. அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, இறுதியில் ஏழு புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். கடைசி இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்றது அவரது சாதனைப் பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

இந்த வெற்றியின் பின்னணியில் இருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் அவரது தொழில் வாழ்க்கை. லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பிரிவில் பொறியியல் படித்தவர் அனுஜ். ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால், செஸ் விளையாட்டின் மீதான தீராத ஆர்வம் அவரை வேறு பாதையில் அழைத்து சென்றது. முழுநேரமாக செஸ் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அந்த வேலையை துறந்து தனது கனவை நோக்கிப் பயணித்தார்.அவரது இந்த முடிவுக்குப் பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். மகனின் திறமையை நம்பி, அவர் விரும்பிய போட்டிகளில் பங்கேற்க தேவையான ஆதரவையும் அளித்தனர். குடும்பத்தின் நம்பிக்கையும், அனுஜின் கடின உழைப்பும் இன்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளன.

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தப் பட்டத்தைப் பெற்றார். அங்கிருந்து தொடங்கிய இந்தியாவின் செஸ் பயணம் இன்று 100 கிராண்ட்மாஸ்டர்கள் என்ற உயரத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக, இளம் வீரர்களின் வருகை இந்திய செஸ் உலகின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.

அனுஜின் சாதனை தனிப்பட்ட வெற்றியாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல.. இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கு இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் ஆர்வத்தையும் இது எடுத்துக் காட்டுகிறது.. முன்பெல்லாம் செஸ் என்பது குறிப்பிட்ட சிலருக்கான விளையாட்டு என்ற எண்ணம் இருந்தது..இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்..

இணையவழிப் பயிற்சிகள், சர்வதேச வீரர்களின் ஆட்டங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள்,சிறு வயதிலேயே கிடைக்கும் பயிற்சி ஆகியவை இந்த வளர்ச்சிக்கு உதவுகின்றன..செஸ் விளையாட்டில் ஒவ்வொரு நகர்வும் மிகுந்த கவனத்தையும் பொறுமையையும் எதிர்பார்க்கிறது.. எதிராளியின் அடுத்த நகர்வைக் கணிப்பது, சரியான தருணத்தில் முடிவெடுப்பது,தோல்வியை ஏற்றுக் கொண்டு மீண்டும் முயற்சிப்பது எனப் பல வாழ்க்கை பாடங்களையும் இந்த விளையாட்டு கற்று தருகிறது..

அனுஜ் தனது பயணத்தில் இதையே நிரூபித்திருக்கிறார்.. இந்தியாவின் 100 வது கிராண்ட் மாஸ்டர் என்ற மைல்கல்லை எட்டியிருக்கும் அவர், இன்னும் பல இளம் வீரர்கள் இந்த விளையாட்டை தேர்ந்தெடுக்க தூண்டுகோலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை..

ஒரு தோல்வியிலிருந்து மீண்டு வருவதுதான் உண்மையான வெற்றியாளரின் அடையாளம். அனுஜ் ஸ்ரீவத்ரியின் பயணம், கனவுக்காக துணிந்து செயல்படுபவர்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த பாடம்!

இதையும் படியுங்கள்:
தாஸ் அண்ணன் வந்தாலே ஃபயரு..! சிம்புவின் அரசன் கிளிம்ப்ஸை சுற்றி எழுந்த புதிய கேள்வி..!!
அனுஜ் ஸ்ரீவத்ரி