படிப்புக்காக விளையாட்டைத் துறந்த இளம் வீராங்கனை!

Archana Kamath
Archana Kamath
Published on

விளையாட்டை வாழ்க்கையாக எண்ணி இந்தியாவில் பல இளைஞர்கள் படிப்பைத் தியாகம் செய்கின்றனர். ஆனால், ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரு வீராங்கனை படிப்பிற்காக விளையாட்டையே தியாகம் செய்திருக்கிறார். இனி விளையாட்டில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் படிப்பில் கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் தேசத்திற்கு சேவையாற்ற முடியும் என்று நம்புகிறார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

பெங்களூரைச் சேர்ந்த 24 வயதான அர்ச்சனா காமத், பத்தாம் வகுப்பில் 98.7% மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 97% மதிப்பெண்கள் எடுத்து சிறந்த மாணவியாக வலம் வந்தார். இதனையடுத்து பொருளாதார துறையில் இளங்கலைப் பட்டமும், 'சர்வதேச உறவுகள்' துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Public Policy என்ற துறையில் சேர்ந்துள்ளார். இவருடைய சகோதரர் அமெரிக்காவில் விண்வெளி பொறியியல் துறையில் பி.எச்.டி பயின்று வருகிறார். இவரின் பெற்றோர் கண் மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய அர்ச்சனா காமத், பள்ளியிலேயே டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கி விட்டார். ஒருபுறம் படிப்பு, மறுபுறம் விளையாட்டு என இரண்டிற்கும் ஒருசேர முக்கியத்துவம் அளித்து வந்தார்.

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றார். இதுவரையில் டேபிள் டென்னிஸில் இந்திய அணி அதிகபட்சமாக காலிறுதி வரை சென்றது இந்த ஒலிம்பிக்கில்தான். தனிப்பட்ட முறையில் அர்ச்சனா காமத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஜெரிமனியிடம் தோற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் தாயகம் திரும்பிய அர்ச்சனா காமத், தனது பயிற்சியாளருடன் தொடர்ந்து விளையாடுவது பற்றி விவாதித்துள்ளார். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியுமா என்று இருவரும் கலந்துரையாடிய போது, தரவரிசையில் 100 இடங்களுக்கும் மேல் இருப்பதால் பதக்கம் வென்று சாதனை படைப்பது கடினமான ஒன்று. இருப்பினும் பதக்கம் வெல்ல அதிக உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும் என பயிற்சியாளர் கூறியுள்ளார். இதன் முடிவில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், தான் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று உயர் கல்வியைத் தொடரவிருப்பதாக அறிவித்தார் அர்ச்சனா. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர், முடிவை மாற்றிக் கொள்ளும்படி சொல்லியும், தனது முடிவை அர்ச்சனா காமத் மாற்றிக் கொள்ளவில்லை

இதையும் படியுங்கள்:
நீரஜ் சோப்ரா மட்டுமல்ல சுமித் அன்டிலும் தங்கமகன் தான்!
Archana Kamath

இதுகுறித்து அர்ச்சனா காமத் கூறுகையில் “விளையாட்டை எந்த அளவிற்கு நேசித்தேனோ, அதே அளவிற்கு கல்வியையும் நேசிக்கிறேன். இதுவரையில் மக்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. இனி எனது படிப்பை முடித்து விட்டு, மீண்டும் இந்தியாவிற்கு வந்து மக்களுக்கு வேறு ஏதேனும் வழியில் சேவையாற்ற விரும்புகிறேன். நிச்சயமாக எனது இந்த முடிவு வருமானத்தைப் பொறுத்து எடுக்கப்பட்டது அல்ல. விளையாட்டில் சாதிக்க முடியாததை படிப்பில் சாதிக்கவே இம்முடிவை எடுத்தேன்” என்று கூறினார்.

மிக இள வயதில் ஓய்வை அறிவித்து இருந்தாலும் கூட தனது அடுத்தகட்ட திட்டத்தை மிகத் தெளிவாக தேர்வு செய்துள்ளார் அர்ச்சனா காமத்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com