நீரஜ் சோப்ரா மட்டுமல்ல சுமித் அன்டிலும் தங்கமகன் தான்!

Sumit Andil
Sumit Andil
Published on

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி சுமித் அன்டில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம், அடுத்த தங்கத்தை வேட்டையாட பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் களம் காண இருக்கிறார் சுமித் அன்டில். இவர் சாதித்ததையும், இவரது இலக்கு என்ன என்பதையும் அலசுகிறது இந்தப் பதிவு.

விளையாட்டில் சாதிக்க ஒவ்வொரு விளையாட்டு வீரனும் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. இந்த உலகம் சாதிக்கத் துடிக்கும் எவரையும் கண்டு கொள்ளாது. சாதித்தவர்களை மட்டும் தான் நினைவில் வைத்திருக்கும். ஆனால், இந்திய தேசத்திற்காக ஒலிம்பிக்கில் சாதித்த ஒரு வீரனைப் பற்றி இங்கு பலரும் அறிந்திருக்கவில்லை. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இது நாட்டில் உள்ள பலருக்கும் தெரியும். ஆனால் அதே டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் மற்றொரு வீரன் தங்கம் வென்றதை பலரும் கண்டுகொள்ளவில்லை. யார் அந்த வீரன்? எப்படி அவர் தங்கம் வென்றார் தெரியுமா?

பொதுவாக ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த சில நாட்களிலேயே மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும். நம்மில் பலரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பது கூட இல்லை. சாதாரண மனிதர்கள் ஒரு விளையாட்டைத் தீவிரமாக விளையாடும் போது அதனை ரசிக்கும் நாம், மாற்றுத்திறனாளிகள் விளையாடினால் கண்டு கொள்வதே இல்லை. இது தான் உண்மை.

மாற்றுத்திறனாளியாக இருந்தும் கூட தன்னால் முடியும் என்ற உத்வேகத்தோடு பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை வென்றார் ஹரியானாவைச் சேர்ந்த சுமித் அன்டில். இவர் பிறக்கும் போது எந்தக் குறையும் இன்றி பிறந்தவர் தான். இளம் வயதில் மல்யுத்தத்தை ஆர்வமாக கற்றுக் கொண்டு இராணுவத்தில் சேர்வதே இவரது இலட்சியமாக இருந்தது. ஆனால், இவருடைய 17வது வயதில் நடந்த ஒரு விபத்தில் இடது காலின் கீழ்ப் பகுதி அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இவரது மல்யுத்தக் கனவு தகர்ந்து போனது.

இருப்பினும் மனம் தளராத சுமித் அன்டில், தனது பார்வையை தடகளத்தின் பக்கம் திரும்பினார். தடகளத்தில் ஈட்டி எறிதலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டார். வெகு விரைவிலேயே மாற்றுத் திறனாளிகள் பிரிவில் சர்வதேச போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் 68.55மீ தூரம் வீசி, உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதையும் படியுங்கள்:
யார் இந்த ஆரோக்கிய ராஜீவ்? தடகளத்தில் இவரின் சாதனைகள் என்னென்ன?
Sumit Andil

நீரஜ் ஜோப்ரா பிரபலமான அளவிற்கு சுமித் அன்டில் பிரபலமாகவில்லை. இருப்பினும் இருவரும் தங்கப் பதக்கத்தை வென்றவர்கள் தான். தற்போது நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வருகின்ற ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் 12 போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 80மீ தூரம் வரை ஈட்டி எறிந்து மீண்டும் ஒரு உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெல்ல சுமித் அன்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பாரா ஒலிம்பிக்கில் நம் இந்திய நட்சத்திரங்கள் பதக்கங்களை வென்று குவிக்க வாழ்த்துகள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com