இன்றைய கிரிக்கெட் விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருப்பது நியாயமா?

Bowler vs Batsman
Cricket
Published on

கிரிக்கெட்டின் வளர்ச்சி இன்றைய நவீன காலத்தில் பன்மடங்கு அதிகரித்து விட்டது. பண மழை பொழியும் விளையாட்டாகவே கிரிக்கெட் இன்று பார்க்கப்படுகிறது. வியாபார நோக்கத்திற்காக இன்று பல கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்திருக்கும் ஐபிஎல் தொடரை இதற்கு உதாரணமாக கூறலாம். கிரிக்கெட் நவீன மயமாகி விட்டதாலோ என்னவோ, பேட்ஸ்மேன்கள் கூட சிக்ஸர்களை விளாசுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிகம் பரிதாபத்திற்கு உள்ளாவது என்னவோ பௌலர்கள் தான். அதற்கேற்ப கிரிக்கெட் விதிகள் கூட பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன.

அன்றைய காலங்களில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனெனில் பல பேட்டர்கள் தடுப்பாட்டத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். தேவைப்படும் நேரங்களில் மட்டுமே அதிரடியைக் கையில் எடுத்தனர். ஆனால் இன்றோ அணியின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அதிரடியாக விளையாடி வருகின்றனர். டி20 கிரிக்கெட் போட்டிகளின் வருகைக்குப் பிறகு தான் இத்தகைய மாற்றங்கள் கிரிக்கெட்டில் அரங்கேறியுள்ளன.

ஒருநாள் போட்டிகளில் முதல் 10 ஓவர்கள் வரையிலும், டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வரையிலுமான பவர் பிளேவில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே பவுண்டரி எல்லையில் நிற்க வேண்டும். இதற்குப் பிறகு 5 பேர் வரை பவுண்டரி எல்லையில் நிற்கலாம். இதுதான் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஓர் அணி கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால், பவுண்டரி எல்லையில் இருந்து ஒரு ஃபீல்டர் உள்ளே வந்து நிற்க வேண்டும். இந்த விதி தற்காலத்தில் கொண்டுவரப்பட்டது.

இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பௌலர்களுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்ற விதி அமலுக்கு வந்ததால், ஒவ்வொரு அணியிலும் கூடுதலாக ஒரு பேட்டர் விளையாடுகிறார். இதனால், பௌலர்கள் தங்களுக்கான வாய்ப்பை இழக்கின்றனர். பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் பல விதிகளால் தான் அதிரடி ஆட்டம் கூட இன்று அதிகரித்து விட்டது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உருவாக காரணமே இந்த வீரர் தான்!
Bowler vs Batsman

பேட்டர்கள் சிக்ஸ் மற்றும் ஃபோர் அடிப்பதை பார்க்கும் போது மட்டும் தான் கிரிக்கெட் சுவாரஸ்யமாக இருந்து விடுமா என்ன? பௌலர்கள் நல்ல பந்துகளை வீசும் போது, அதனை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதைப் பார்க்கும் போது கூட கிரிக்கெட் சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழலில் இதற்கு உதாரணமாக இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை கூறலாம். சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள, ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தடுமாறினர். பும்ராவின் நேர்த்தியான பந்துவீச்சால், அவர் அதிக விக்கெட்டுகளையும் எடுத்தார்.

கிரிக்கெட்டில் எப்போதும் அதிகமாக பேட்ஸ்மேன்களே கொண்டாடப்படுகின்றனர். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற பௌலர்களின் கடின உழைப்பும் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை யாரும் மறந்திட வேண்டாம். இனி ஏதேனும் புதிய கிரிக்கெட் விதிகள் அமலுக்கு வந்தால், அது பௌலர்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com