ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்ஸி பதவி மாற்றப்பட்டது. அதாவது, ரோகித் ஷர்மாவுடைய கேப்டன்ஸி ஹார்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் ஹார்திக்கை மிகவும் ட்ரோல் செய்தார்கள். அப்போது ரோகித் ஷர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா கூட பேசிக்கொள்ளவில்லை என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணியின் கேப்டன், இந்தமுறை மாற்றப்பட்டார். ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி, ஹார்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல், மும்பை அணியின் ஆட்டமும் சுமாராகத்தான் இருந்தது. மும்பை அணி இறுதி போட்டிக்கும் முன்னேறவில்லை. அதற்கு கேப்டன்ஸி மாற்றம் என்ற ஒரே காரணத்தை மட்டும் முதன்மையாக சொல்லிவிட முடியாது. ஆனால், ரசிகர்கள் அதுதான் காரணம் என்று ஹார்திக் பாண்டியாவை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர்.
அப்போது மைதானத்தில் ஹார்திக் பாண்டியாவும் ரோகித் ஷர்மாவும் நன்றாகப் பேசிக்கொண்டது போலத்தான் இருந்தது. ஆனால், ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்றே கணித்தனர்.
இந்தநிலையில், இருவரும் அப்போதிலிருந்து உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் வரை பேசிக்கொள்ளவே இல்லை என்ற செய்திகள் வந்துள்ளன. உலகக்கோப்பை பயிற்சியின் முதல் நாள் இருவருமே முகத்தை நேருக்கு நேர் கூட பார்த்துக்கொள்ளவில்லை. பின் இருவரும் இரண்டாவது நாள் பயிற்சியின்போது ஒரு இடத்தில் நின்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பேசி, பின் முன்பிருந்தது போல வழக்கமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்தான். அவர்தான் அணி ஒற்றுமையின் பலத்தையும், உலகக்கோப்பையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறி அணியை ஒன்றிணைத்திருக்கிறார். அதன்பின்னரே இந்திய அணி எந்தப் பதற்றமும் இல்லாமல் விளையாடத் தொடங்கியது.
இந்த செய்தியை, உலகக்கோப்பை தொடரின் பயிற்சி முதல் தொடர் முடியும் வரை நேரில் கண்காணித்த பத்திரிக்கையாளர் விமல் குமார் பகிர்ந்திருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அட்டகாசமாக விளையாடி, கோப்பையை வென்றது. குறிப்பாக ஹார்திக் பாண்டியா மற்றும் ரோகித்தின் செயல்பாடுகளே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.