சமீபக்காலமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Arjun Tendulkar, சச்சின் டெண்டுல்கரின் மகன், இந்திய கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் ஒரு வீரர் ஆவார். இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும், இடது கை பேட்ஸ்மேனாகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம்:
அர்ஜுன் டெண்டுல்கர் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானுக்கு எதிராக கோவா அணிக்காக தனது முதல் 'முதல் தர' கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது. 207 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தது அவரது திறமையை வெளிக்காட்டியது.
ஐபிஎல் அறிமுகம்:
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் தனது ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். அவரது அறிமுகப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் அவர் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்தார், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
அவர் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமாரை வீழ்த்தி பெற்றார். இதுவரை அவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அர்ஜுன் டெண்டுல்கர், தனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் புகழைத் தொடர்ந்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார். அவரது இடது கை வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் திறமை இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்று நம்பலாம்.
ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சரியாக வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்பதால், அவர் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
அதாவது பவுலராக இருப்பதில் இருந்து தன்னை பேட்டிங் ஆல்ரவுண்டராக மாற்ற இப்போது திட்டமிட்டுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். உள்ளூர் போட்டிகளில் பேட்டிங் ஆடிய அனுபவம் அவருக்கு இருப்பதால் இனிமேல் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். யுவராஜ் சிங்கிடம் அர்ஜூன் பயிற்சி எடுத்தால், அபிஷேக் ஷர்மா போல் ஆகிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.