அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் பல. எப்படி அவற்றிற்குச் சரியான தீர்வுகளைக் காண்பது என்று தெரியாமல் தவிக்கிறோம். இதோ அறிவியல் ரீதியான ஒரு வழி இருக்கிறது.
இதைக் கண்டு அறிமுகப்படுத்தியவர் மரியோ சிட்னி பஸாடர் (Mario Sidney Basadur) என்பவர். ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க கீழே உள்ள எட்டு படிகளைக் கடைப்பிடியுங்கள் என்பது அவரது அறிவுரை.
1. பிரச்னையை இனம் காணுதல்:
முதலில் பிரச்னை என்ன என்பதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். உதாரணமாக ஒரு நிறுவனம் என்று எடுத்துக் கொண்டால், அங்கு வாடிக்கையாளர்களும் விநியோகஸ்தர்களும் எதை விரும்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்கு வாடிக்கையாளர்கள் ஏதேனும் யோசனை தருகிறார்களா? இன்னும் எப்படி அவர்களுடன் அதிகம் தகவலைப் பரிமாறித் தொடர்பு கொள்ள முடியும்? இப்போது வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் என்ன நடக்கிறது? என்பன போன்றவற்றை அலசி ஆராயலாம். தனி மனிதப் பிரச்னைகளிலும் இதேபோல பிரச்னையை முதலில் இனம் காண வேண்டும்.
2. உண்மையைக் காணுதல்:
அடுத்தது பிரச்னைக்குக் காரணம் என்ன? இது ஏன் தோன்றியது என்பதை ஆராய்வது தான்.
3. பிரச்னையை சரியாக வரையறுத்தல்:
அடுத்து பிரச்னையை சில வார்த்தைகளில் வரையறுத்துக் கொள்வது. ஏன், எதற்காக என்ற கேள்விகளைக் கேட்டால், பிரச்னை உருவான காரணமும், அது இன்றைக்கு இருக்கும் நிலையும் தெரிய வரும்.
4. அடுத்து தீர்வுகளைக் காணுதல்:
ஏராளமான கருத்துக்களைச் சேர்ப்பது தான் அடுத்த படி. இதற்கு தக்கவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். இதன் மூலம் பல்வேறு யோசனைகள் கிடைக்கும். யோசனை கூறுபவர்களைக் கண்டிக்கவோ, ஏளனம் செய்யவோ கூடாது. மனதில் தேக்கி வைத்திருக்கும் கருத்தே முட்டாள்தனமான கருத்து. வெளியில் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களும் வரவேற்கத்தக்கவையே என்ற அடிப்படைக் கோட்பாட்டுடன் ‘ப்ரெய்ன் ஸ்டார்மிங்’ எனப்படும் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைச் செய்தல் வேண்டும்.
5. உரிய வழிகளைப் பரிசீலித்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்:
ஏராளமான கருத்துக்களும் தீர்வுகளும் இப்போது கைவசம் இருக்கும் நிலையில் இவற்றில் எது சரியாக அமையும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்குமா, இதற்கு ஆகும் நேரம், பணம், முயற்சி எவ்வளவு வேண்டும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது தான் அடுத்த கட்டம்!
பின்னர் செய்ய வேண்டியதைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.
6. அடுத்தது திட்டமிடல்:
இப்போது தீர்வை அமல்படுத்த ஒரு செயல் திட்டம் தேவை. யார், எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது தான் அடுத்த படி.
7. தீர்வை அமல்படுத்த ஆதரவைத் திரட்டல்:
நிர்வாகம் என்றால் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டுமானால் அங்கு வேலைப் பார்க்கும் பணியாளர்கள் அதை ஏற்க வேண்டும்.
குடும்பம் என்றால் அதன் உறுப்பினர்கள் தீர்வை ஆதரிக்க வேண்டும்.
8. திட்டத்தை நிறைவேற்றல்:
இதுவே தீர்வை அமல்படுத்த உள்ள இறுதிக் கட்டம்!.
அமல்படுத்தும் போது அதை நன்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இன்னும் ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தீர்வினால் வரலாம்.
இதை முடித்த பின்னர் முதல் படிக்குச் சென்று இதை விட இன்னும் சிறந்த வழி மூலம் பிரச்னைக்குத் தீர்வு உண்டா என்று கேட்டுக் கொள்ளலாம்.
இதை SIMPLEX PROBLEM SOLVING PROCESS என்று கூறுவர்.
பஸாடரால் பயனடைந்தோர் ஏராளமானோர் உண்டு. தனிநபரும் சரி, நிறுவனங்களும் சரி பஸாடரின் வழிகளைக் கடைப்பிடிக்கலாம்
முயன்று பாருங்கள்! தீர்வில்லாத பிரச்னையே இருக்காது!