இளம் கிரிக்கெட் வீரர்களை எச்சரிக்கும் அஸ்வின்!

Ravichandran Ashwin
Ravichandran Ashwin
Published on

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அதிலும் ஐபிஎல் தொடர் வந்த பிறகு, பல இளம் வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கின்றன. இந்த நிலையில் இளம் வீரர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இன்றைய நிலையில் ஒரு அணி முழுமையாகத் தயாராக பயிற்சியாளரின் தேவை அவசியமாகிறது. ஆனால் அப்படியே சில ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், அப்போதெல்லாம் பயிற்சியாளர் என்று ஒருவர் இல்லவே இல்லை. ஒரு அணிக்கு ஒரு மேலாளர் தான் இருப்பார். அவர் தான் வீரர்களின் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றைக் கவனித்துக் கொள்வார். தேவைப்படும் நேரங்களில் அறிவுரை வழங்குபவரும் இவரே. இப்படித் தான் 1983 ஆம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. ஆனால் இன்றைய கால நவீன கிரிக்கெட்டில் தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பௌலிங் பயிற்சியாளர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் என பலர் உள்ளனர்.

அணியில் பயிற்சியாளர்கள் இருப்பது நல்லது தான் இருப்பினும், இளம் வீரர்கள் பயிற்சியாளர்களை மட்டும் முழுவதுமாக நம்பியிருக்க கூடாது என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்றைய இளம் வீரர்கள் பயிற்சியாளர்களை நம்பி இருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான செயல்முறை. எந்தச் சூழலிலும் நாம் இன்னொருவரைச் சார்ந்து இருக்கக் கூடாது. நீங்கள் பயிற்சியாளரை மட்டும் சார்ந்து இருந்தால், உங்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றாது. பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்கும் சில வழிமுறைகளும், ஐடியாக்களும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்ததாது.

ஒரு வீரருக்கு ஒரு செயல்முறை சரியாக செயல்பட்டு விட்டது என்றால், மற்ற வீரர்களும் அதையே கடைபிடிக்குமாறு பயிற்சியாளர்கள் சொல்வதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முன் வீசப்படும் சவால்களை தாங்களாகவே முயன்று சமாளிக்க வேண்டும். வீரர்களுக்கு நிச்சயமாக மற்றவர்களின் உதவி தேவைப்படும். அதற்காக அவர்களை முழுமையாக சார்ந்து இருக்கக் கூடாது. நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய தொடக்க காலத்தில் டபிள்யூ வி ராமன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்; எனக்குள் இருந்த பல புதிய யுக்திகளை வெளிப்படுத்த தூண்டுகோலாக இருந்தார்; பல வழிகளை எனக்கு காட்டினார். அதில் எந்த வழி சிறந்தது என்பதை நானே தான் தேர்வு செய்தேன்.

இதையும் படியுங்கள்:
"தமிழ்நாட்டின் ஜான்டி ரோட்ஸ் இவர் தான்"- அஸ்வின் பாராட்டு!
Ravichandran Ashwin

கிரிக்கெட் குறித்த விழிப்புணர்வு உங்களிடம் இல்லையென்றாலும், உங்களது புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாவிட்டாலும் நீங்கள் மற்றவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும். அதற்காக பயிற்சியாளரை சார்ந்து விளையாடிய வீரர்கள் சாதிக்கவில்லை என்று அர்த்தமல்ல. அப்படி சார்ந்து விளையாடிய சாதித்தாலும் கூட, உங்களது முழுத் திறன் நிச்சயமாக வெளிப்படாது” என அஸ்வின் எச்சரித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com