
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 20 வயது இந்திய வீராங்கனை ருபல் சவுத்ரி 52.68 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜப்பானின் நனாகோ மட்சுமோடோ தங்கப்பதக்கமும், உஸ்பெகிஸ்தானின் ஜோன்பிபி ஹூக்மோவா வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் (53.00 வினாடி) 5-வது இடமே பெற்றார்.
அதேபோல் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பூஜா 4 நிமிடம் 10.83 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீராங்கனை லில்லி தாஸ் (4 நிமிடம் 13.81 வினாடி) 4-வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான டெக்கத்லான் (100, 400, 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்பட 10 பந்தயங்களை உள்ளடக்கியது) பந்தயத்தில் இந்திய வீரர் தேஜஸ்வின் ஷங்கர் (7,618 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். தேஜஸ்வின் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2023-ம் ஆண்டில் வெண்கலம் வென்றிருந்தார்.
‘டிரிபிள்ஜம்ப்’ (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் தனது 3-வது வாய்ப்பில் 16.90 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். நடப்பு சாம்பியனான கேரளாவை சேர்ந்த அப்துல்லா அபூபக்கர் (16.72 மீட்டர்) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் யூனுஸ் ஷா 3 நிமிடம் 43.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.
இந்நிலையில் 4x400 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவு தொடர் ஓட்டத்தில் ருபல் சவுத்ரி, சுபா வெங்கடேசன், சந்தோஷ்குமார், விஷால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 18.12 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தக்கவைத்தது. இந்திய அணியில் இடம் பெற்ற ருபல் சவுத்ரி (உத்தரபிரதேசம்) தவிர மற்ற அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்தியா வென்ற 2-வது தங்கம் இதுவாகும். முதல் நாளில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் தங்கம் வென்று இருந்தார்.