
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 4-வது நாளில் நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 13 நிமிடம் 24.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல் கார்னி 13 நிமிடம் 34.47 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குல்வீர் சிங் நடப்பு போட்டியில் வென்ற 2-வது தங்கம் இதுவாகும்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் 18 வயது இந்திய வீராங்கனை பூஜா சிங் தனது சிறந்த செயல்பாடாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
அரியானாவை சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் மகளான பூஜா ஏழ்மையான சூழ்நிலையிலும் சாதித்து காட்டி இருக்கிறார். இதன் மூலம் ஆசிய தடகளத்தில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை சொந்தமாக்கினார்.
100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 7 பந்தயங்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா (5,941 புள்ளிகள்) தங்கப்பதக்கத்தை வென்றார். தெலுங்கானாவை சேர்ந்த அவர் 800 மீட்டர் ஓட்டத்தில் அசத்தியதன் மூலம் முன்னிலையில் இருந்த சீனாவின் லூ ஜிங்யியை (5,869 புள்ளி) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்தார். ஹெப்டத்லானில் தங்கப்பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கினார்.
3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 9 நிமிடம் 12.46 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றதுடன் தேசிய சாதனையும் படைத்தார்.
இந்த போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 15 தங்கம் உள்பட 26 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.