#JUST IN : குவியும் பாராட்டுக்கள்.! இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்த மகளிர் கிரிக்கெட் அணி.!

ஆசிய விளையாட்டு 2026: இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை!
ஆசிய விளையாட்டு 2026
ஆசிய விளையாட்டு 2026Source:mykhel
Updated on

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில், இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், வலுவான பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியிலும் இவ்விரு அணிகளுமே மோதிக்கொண்டன. அதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்த நிலையில், இந்த ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியிலும் அதே பலப்பரீட்சை தொடர்ந்தது.

இந்த ஆட்டத்திலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், இலங்கை மகளிர் அணி தங்களின் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து, தங்கப்பதக்கத்தை வெல்லும் முயற்சியில் களம் காண்கிறது. இதனால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்து இலங்கை பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், அவர் வெறும் 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து களம் புகுந்த முன்னணி வீராங்கனைகளும் அதிரடியை வெளிப்படுத்த, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் என்ற மலைக்கவைக்கும் இமாலய இலக்கை நிர்ணயித்தது.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலடி கொடுக்கக் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் அச்சுறுத்தலாக அமைந்தனர். துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங் காரணமாக இலங்கை பேட்டர்களால் ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டுகளை வரிசையாகப் பறிகொடுத்தனர்.

குறிப்பாக, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, தனது 4 ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இவருக்குத் தகுந்த ஆதரவு அளித்த ஸ்ரீ சராணி, ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்து இலங்கையின் வீழ்ச்சியை துரிதப்படுத்தினர்.

போட்டியின் 15.4-வது ஓவரில், இலங்கை அணியின் கடைசி விக்கெட்டான கௌஷினி நுத்யங்கனாவை ஸ்ரேயங்கா பாட்டீல் மிக நேர்த்தியாக போல்டாக்கினார். இதன் மூலம் இலங்கை அணி வெறும் 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

147 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த அபார வெற்றியின் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றித் தங்களது முந்தைய சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி பெற்றுத் தந்துள்ளது. ஆசியக் கோப்பையை தொடர்ந்து ஆசிய விளையாட்டிலும் தங்கம் வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உலகிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
குவியும் பாராட்டுக்கள்..! 150வது டி20 போட்டியில் உலக சாதனை படைத்த தீப்தி ஷர்மா..!
ஆசிய விளையாட்டு 2026
logo
Kalki Online
kalkionline.com