

ஜப்பான் - நாகோயாவில் நடைபெற்று வந்த ஆசியன் பாரா 2026 விளையாட்டு போட்டிகள் , கண் கவர் நிகழ்ச்சிகளுடன் , இனிதே நிறைவு பெற்றது. கடந்த பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களுடன் நான்காம் இடம் பெற்றிருந்த இந்தியா, இம்முறை கூடுதலாக 3 பதக்கங்களை பெற்று 4 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆசிய பாராலிம்பிக் குழுவின் தலைவர் மஜித் ரஷீத், நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டியும் , அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் பேசி நிகழ்ச்சி நிறைவடைந்ததாக அறிவித்தார்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜப்பானின் பிரதமர் சானே டகாயிச்சியும், விளையாட்டு வீரர்களின் உறுதி , குழுப்பணி மற்றும் விளையாட்டு மனப்பான்மையைப் பாராட்டி பேசினார்.மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு மனப்பான்மையை ஊக்குவிக்கவும் , அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலும் தூர கிழக்கு மற்றும் தென் பசிபிக் விளையாட்டு கூட்டமைப்பிலிருந்து, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் உருவாகியது.
பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டின் பெருமையை நிலை நிறுத்தினர். தடகள பிரிவில் அதிகபட்சமாக 65 பதக்கங்களை இந்திய அணியினர் வென்றிருந்தனர். இதில் 22 தங்கம், 19 வெள்ளி , 24 வெண்கலம் அடங்கும். இந்த பிரிவிற்கு அடுத்ததாக பேட்மிண்டன் பிரிவில் 16 பதக்கங்களை இந்திய அணியினர் பெற்றிருந்தனர். இதில் 3 தங்கம் , 5 வெள்ளி , 8 வெண்கலமும் அடங்கும். மற்ற பிரிவுகளில் வில்வித்தையில் 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி வென்றிருந்தனர்.
இந்தியாவை பொருத்தவரையில் ஷீத்தல் தேவி 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் வென்று அதிகப் பங்களிப்பை அளித்துள்ளார். துளசிமதி முருகேசன், ரவி புடிகினா மற்றும் ஹிமான்ஷு நந்தால் ஆகியோரும் தலா 3 பதக்கங்களை அள்ளிச் சென்றனர். துளசிமதி 1 தங்கம் , 2 வெள்ளிப் பதக்கங்களையும், ரவி கார்த்திக் 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தையும், ஹிமான்ஷு 3 வெண்கலப் பதக்கங்களையும் வென்று முன்னிலையில் உள்ளனர்.
நிஷாத் குமார், மோனா அகர்வால் , பிரணவ் சூர்மா, சிம்ரன் மற்றும் திலீப் காவிட் ஆகியோர் பாரா துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பாரா தடகளப் போட்டிகளில் தலா 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சீனா 435 பதக்கங்களை வென்று மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இதில் 207 தங்கம் , 117 வெள்ளி , 111 வெண்கல பதக்கமும் அடங்கும். அதைத் தொடர்ந்து ஜப்பான் 64 தங்கம் , 60 வெள்ளி , 62 வெண்கலம் என 186 பதக்கங்களை வென்று 2 இடம் பிடித்துள்ளது. 3 ஆம் இடத்தில் உள்ள உஸ்பெக்கிஸ்தான் 45 தங்கம் , 49 வெள்ளி , 51 வெண்கலம் என்று மொத்தமாக 145 பதக்கங்களை வென்றுள்ளது.
முதன்முறையாக பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2010-ல் சீனாவின் குவாங்சோவில் தொடங்கின. இந்த விளையாட்டுப் போட்டிகளின் ஐந்தாவது பதிப்பு தற்போது ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் அடுத்த பதிப்பு 2030 ஆம் ஆண்டு கத்தாரின் தோஹா நகரில் நடைபெற உள்ளது.