Aus vs Ind: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சண்டிகரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதலாவது கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி செப் 17 (நேற்று), புதிய சண்டிகர், முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திரசிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்ரீ சரணிக்கு பதிலாக அருந்ததி ரெட்டி மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இம்முறை டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் வழக்கமான துவக்க ஆட்டக்காரர்களான பிரத்திகா ராவலும் ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர். இந்த ஜோடி 11 ஓவர் வரை நிலைத்து நின்று ஆடி 70 ரன்கள் சேர்த்தனர். பிரத்திகா ராவல் 25 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஸ்மிருதி ஒரு புறம் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். மறுபுறம் சரியான பார்ட்னர்ஷிப் அவருக்கு கிடைக்கவில்லை. ஹார்லின் தியோல் 10 ரன்களிலும் கேப்டன் ஹர்மன் பிரித் கவூர் 17 ரன்களிலும் வெளியேறினர்.
ஸ்மிருதி மந்தனா பந்துகளை பறக்க விட்டு 4 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகளை அடித்து அதிவேகமாக சதத்தினை கடந்தார். 117 ரன்களை குவித்து ஸ்மிருதி ஆட்டமிழந்தார். இது ஸ்மிருதி அடிக்கும் 12 வது சதமாகும், ஆஸி அணிக்கு எதிராக அவரது 3 வது சதம். தீப்தி ஷர்மா (40) மற்றும் ரிச்சா கோஷ் (29) அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.
அதன் பின்னர் அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. என்ன அவசரமோ? இன்னும் ஒரு பந்தை சந்தித்து இருக்கலாம். 49.5 ஓவருக்குள் 292 ரன்களை குவித்து இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸி அணியின் டார்சி பிரவுன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் ஆஷ்லே கார்ட்னர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
293 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி விரட்டலை துவங்கியது. ஆஸி அணியின் சார்பாக அலிஸா ஹேலியும் ஜார்ஜியா வோலும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஜார்ஜியா மிகவும் அவசரம் என வந்த உடனே டக் அவுட்டாகி வெளியேறினார்.
அலிஸாவுடன் ஜோடி சேர்ந்த எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். 5 பவுண்டரிகளை அடித்து 44 ரன்கள் குவித்த பெர்ரி ஆட்டமிழந்தார். ஆஸி அணிக்கு நம்பிக்கை கொடுத்த அனாபெல் சதர்லேண்ட் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.
ஆஷ்லே கார்டனர் (17) , தலியா மெக்ராத் (16) , ஜார்ஜியா வேர்ஹாம் (10) என தொடர்ச்சியாக ஆஸி அணியின் வீராங்கனைகள் வந்த வேகத்தில் வெளியேறினர். இறுதியாக 40.5 ஓவரில் ஆஸி அணியின் மொத்த வீராங்கனைகளும் அவுட்டாகி வெளியேற, 190 ரன்களில் ஆஸியின் கதை முடிந்தது. இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. கிரந்தி கவுடும் (3) , தீப்தி ஷர்மாவும் (2) அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.
2 வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. சதமடித்து வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக ஆஸி அணி 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது. அதன் தொடர் வெற்றிக்கு இந்திய அணி முற்றுப் புள்ளி வைத்து விட்டது. 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி தோல்வியடைவது இதுவே முதல்முறை. இந்த தொடரின் அடுத்தப் போட்டி செப் 20 ஆம் தேதி, புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும்.