பரபரப்பாக பேசப்பட்ட ஒரு முதல் தர கிரிக்கெட் ஆட்டம் பற்றிய சில விவரங்களை காண்போம். 1948 ல் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணம் புகழ்பெற்ற டான் பிராட்மனின் கடைசி சுற்று பயணமாக அமைந்தது.
அவர் தலைமையில் சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடிய எந்த மேட்சிலும் தோல்வியை தழுவவில்லை. Invincible என்ற பெயரைப் பெற்றது. ஒரு முதல் தர ஆட்டத்தில் ஒரே நாளில் 721 ரன்கள் குவித்து அசத்தினர்.
எஸ்ஸக்ச் (Essex) அணிக்கு எதிரான மூன்று நாட்கள் மேட்ச் அது. மொத்தம் விளையாடப்பட்டது இரண்டே நாட்கள் தான்.
ஆஸ்திரேலிய வீரர்கள் நால்வர் சதங்கள் எடுத்தனர். கேப்டன் டான் பிராட்மன் 187, பில் பிரவுன் 153, சாம் லொக்ஸ்டொன் 120, ரோன் சாக்கர்ஸ் 104* ரன்கள் எடுத்தனர். ஈடாக எஸ்ஸக்ச் அணி பவுலர்கள் நால்வர் தலா சதம் ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். அவர்கள் ட்ரெவோர் பைய்லி 2 - 128, ரே ஸ்மித் 2 - 169, பீட்டர் ஸ்மித் 4 - 193, எரிக் பிரைஸ் 0 - 156. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 721 ரன்களுக்கு ஆல் அவுட். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு தினம்.
மூன்றாம் நாள் எஸ்ஸக்ச் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை எதிர் கொள்ள திணறி முதல் இனிங்க்சில் எடுத்தது 83 ரன்கள். தொடர்ந்து பால்லோவ் ஆன் பெற்று இரண்டாவது இனிங்க்சில் எடுத்த ஸ்கோர் 187. ஆஸ்திரேலிய பவுலர் எமி டோஷாக் 5 - 31 (முதல் இன்னிங்ஸ்) இயன் ஜான்சன் 6 - 37 (இரண்டாவது இன்னிங்ஸ்) விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினர்.
எஸ்ஸக்ச் அணி கேப்டன் டாம் பெயர்ஸ் 71, பீட்டர் ஸ்மித் 54 ரன்களை இரண்டாவது இனிங்க்சில் எடுத்து தாக்கு பிடித்தனர். டான் பிராட்மன் வயது 40. அந்த சுற்றுப் பயணத்தில் வீரராக இருந்த நீல் ஹார்வே வயது 21.
அந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட வீரர்களில் நீல் ஹர்வே மட்டும் இருக்கிறார். தற்பொழுது வயது 96. ஆஸ்திரேலிய அணி எஸ்ஸக்ஸ் அணியை ஒரு இன்னிங்ஸ் 451 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதித்தது. அன்றைய கால கட்டத்தில் ஒரே அணி ஒரே நாளில் ஒரே இன்னிங்சில் 721 ரன்கள் ஸ்கோர் செய்தது அசாத்திய சாதனை தான். இன்று வரை அந்த சாதனை முறியடிக்க படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.