முன்னாள் விம்பிள்டன் இறுதி போட்டியாளர் நிக் கிர்கியோஸ், முன்னாள் யு.எஸ். ஓபன் சாம்பியன் எம்மா ராடுகானு உள்ளிட்ட பல முக்கிய வீர்ர்களின் பெயர்கள் 2024 சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் பட்டியலில் இடம்பெறவில்லை.
முதல் பட்டியலில் உள்ளூர் டென்னிஸ் வீர்ரான நிக் கிரிக்கியோவின் பெயர் இடம்பெறாத நிலையில் அவர் இப்போட்டியில் விளையாட காரியங்களைச் செய்தாக வேண்டும். காயமடைந்ததால் கிர்கியோஸ் 2023 சீசனில் விளையாடவில்லை.
2022 இல் ஆஸ்திரேலியாவில் தனாசி கொக்கிநாகிஸுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்ற கிர்கியோஸ், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றையும். யு.எஸ். ஓபனில் காலிறுதியையும் எட்டினார். ஆனால், முழங்காலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் 2023 இல் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் தவறவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதனால் கிராண்ட் ஸ்லாம் போட்டியிலிருந்து ஓதுங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து மணிக்கட்டில் தசைநார் கிழிந்ததால் விம்பிள்டன் போட்டியிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதோபோன்ற மணிக்கட்டில் ஏற்பட்ட பிரச்னை, முழங்கால் வலி மற்றும் கணுக்கால் வலி காரணமாக அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை.
28 வயதான கிர்கியோஸ், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் பங்கேற்பாரா என்பது நிச்சயமில்லாமல் உள்ளது. எனினும் எப்படியும் கிர்கியோஸ் போட்டியில் பங்கு பெறுவார் என்று ஆஸ்திரேலிய ஓபன் ஏற்பாட்டாளர் கிரெய்க் டிலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும். ஆனால், ஆடுவதா, வேண்டாமா என்பதை அவரோ அவரது ஏஜென்டோதான் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிர்கியோஸ் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். ஏனெனில் அவர், 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதுவரை அவர் பொருமையாக காத்திருக்க வேண்டும். டென்னிஸ் ஆடுவதற்கு பொறுமையும், கடும் பயிற்சியும் முக்கியம். அவர், பழைய நிலையை எட்டுவதற்கு நாளாகும் என்று டென்னிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரஃபேல் நடால், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவரது பெயர் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.