
முந்தைய காலத்தை விட இன்று கிரிக்கெட்டின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. டி20 போட்டிகள் வந்த பிறகும் கூட, டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அடிக்கப்படும் சதங்களை விடவும் டெஸ்ட் சதங்கள் மிகவும் உயர்ந்ததாகவே கருதப்படுகின்றன. அதிலும் அயல்நாட்டில் ஒரு வீரர் சதமடித்தால், அது சாதனையாக மாறுகிறது. அவ்வகையில் ஆசிய நாடுகளில் அதிக சதங்களை விளாசிய ஆஸ்திரேலிய வீரர்கள் யார் யார் என இப்போது பார்ப்போம்.
கிரிக்கெட் உலகில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால், ரசிகர்கள் பலரும் முதலில் சொல்வது ஆஸ்திரேலியாவைத் தான். அந்த அளவிற்கு பல ஐசிசி கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. அதற்கேற்ப அதிர்ஷ்டமும் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருப்பதை பல போட்டிகளில் நாம் பார்த்துள்ளோம். மேலும் கிரிக்கெட் மீதான ஆஸ்திரேலிய வீரர்களின் அதீத ஈடுபாடு களத்தில் தெரியும். வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளைக் குவித்துள்ளது ஆஸ்திரேலியா.
பொதுவாக ஆசிய நாடுகளில் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. ஆகையால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகள் ஆசிய மண்ணில் தடுமாறும். இருப்பினும் ஒருசில வீரர்கள், மைதானத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு ரன்களைக் குவிப்பார்கள். அவ்வகையில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங், உஸ்மான் க்வாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் ஆசிய மண்ணில் அதிக சதங்களை அடித்து ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித் இதுவரை ஆசியாவில் 7 சதங்களைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இதில் இலங்கையில் 4 சதங்களும், இந்தியாவில் 3 சதங்களும் அடங்கும். இலங்கையில் அதிக சதங்களை விளாசிய வெளிநாட்டவர் பட்டியலிலும் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இலங்கையில் தலா 3 சதங்களை அடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக டெஸ்ட்டில் 36 சதங்களை விளாசியிருக்கும் ஸ்மித், அதிக டெஸ்ட் சதங்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக ஆசியாவில் 6 சதங்களை விளாசி ஆலன் பார்டர் இரண்டாவது இடத்தில் உள்ளார். தலா 5 சதங்களை விளாசி ரிக்கி பாண்டிங் மற்றும் உஸ்மான் க்வாஜா ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தலா 1 சதத்தைப் பதிவு செய்த இரண்டாவது வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் க்வாஜா. இதற்கு முன் இங்கிலாந்தின் அலஸ்டயர் குக் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் க்வாஜா ஆகியோர் மட்டுமே தற்போது கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் சதங்களை அதிகளவில் கொண்டாடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தும், மைதானத்தின் தன்மையும் தான். மைதானத்தைப் புரிந்து கொள்ளும் வீரர்கள் தான், சிறந்த டெஸ்ட் வீரர்களாக உருவெடுக்கிறார்கள். இதில் முக்கியமானவர் ஸ்டீவ் ஸ்மித்.