
கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டிலும் பல சாதனைகளுடன் இவர் முன்னணியில் இருக்கிறார். ஒருநாள் போட்டியை விடவும் அதிக சவாலானதாக கருதப்படுபவை டெஸ்ட் போட்டிகள் தான். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களைக் கடந்த வீரர்கள் வெகு சிலரே. அந்த வீரர்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
கிரிக்கெட் வீரர்களின் பொறுமையையும், தன்னம்பிக்கையையும் சோதிக்கும் போட்டியாக டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இதில் பயன்படுத்தும் சிவப்பு நிறப் பந்துகள்தான். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெள்ளை நிறப் பந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆட வேண்டியது அவசியமாகிறது. இதன் காரணமாகவே இன்று வரையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்கள் சுவாரஸ்யத்துடன் விரும்பிப் பார்க்கின்றனர்.
உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 வீரர்கள் மட்டுமே 10,000 ரன்களைக் கடந்துள்ளனர். இதில் 4 ஆஸ்திரேலிய வீரர்களும், 3 இந்திய வீரர்களும், 2 இங்கிலாந்து வீரர்களும், 2 இலங்கை வீரர்களும், 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும், 1 பாகிஸ்தான் வீரரும் அடங்குவர். 10,000 ரன்களுக்கும் மேல் அடித்த வீரர்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 15,921
2. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,378
3. ஜாக் கல்லீஸ் (தென்னாப்பிரிக்கா)- 13,289
4. ராகுல் டிராவிட் (இந்தியா) - 13,288
5. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 12,972
6. அலஸ்டயர் குக் (இங்கிலாந்து) - 12,472
7. குமார் சங்கக்காரா (இலங்கை) - 12,400
8. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 11,953
9. சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 11,867
10. மஹேளா ஜெயவர்த்தனே (இலங்கை) - 11,814
11. ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 11,174
12. ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) - 10,927
13. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 10,140
14. சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 10,122
15. யூனுஸ் கான் (பாகிஸ்தான்) - 10,099
மேற்கண்ட 15 வீரர்களில் ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவர் மட்டுமே தற்போது கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். மற்ற அனைவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஜோ ரூட் இன்னும் சில ஆண்டுகள் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் இருக்கும் நான்கு ஆஸ்திரேலிய வீரர்களும் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டும் போது, தங்கள் அணியை கேப்டனாக வழிநடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி டெஸ்ட்டில் 10,000 ரன்களை எட்டுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக ரன் குவிப்பதில் விராட் கோலி தடுமாறி வருகிறார். இருப்பினும் கோலி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினால் நிச்சயமாக 10,000 ரன்களை எட்டி விடுவார். தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி 9,230 ரன்களைக் குவித்துள்ளார். அடுத்ததாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 10,000 ரன்களை கடக்க இன்னும் சில 100 ரன்களே தேவைப்படும் என்பதால் இவரும் இந்த பட்டியலில் சேர வாய்ப்பு உள்ளது.