நேற்றைய ஆட்டத்தின்மூலம் புவனேஷ் குமார் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அது என்னவென்று பார்ப்போம்.
நேற்று (ஏப்ரல் 27, 2025) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட் செய்தபோது, ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய அபிஷேக் போரல் (11 பந்துகளில் 28 ரன்கள்) ஆட்டமிழந்த பிறகு, அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. கேப்டன் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல் (12 ரன்கள்) மற்றும் தேவ்தத் படிக்கல் (0 ரன்) விரைவாக ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் படிதாரும் (6 ரன்கள்) ஏமாற்றமளித்தார். இதனால் 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது.
இந்த நிலையில், அனுபவ வீரர் விராட் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா ஆகியோர் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி நிதானமாக ஆடி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக ஆடி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரும் இணைந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கோலி ஆட்டமிழந்த பிறகு, டிம் டேவிட் அதிரடியாக ஆடி 5 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
இப்படியான நிலையில், புவனேஷ் குமார் மூன்று விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அவர் இதுவரை மொத்தம் 193 விக்கெட்டுகளை கைப்பற்றி பெருமை சேர்த்திருக்கிறார். 18 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.