பௌலர்கள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஒதுக்கப்படுகிறார்களா? - பும்ரா ஆதங்கம்!

Jasprit Bumrah
Jasprit Bumrah
Published on

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, கேப்டன்ஷிப் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்த வரையில், கேப்டன்ஷிப் என்பது எப்போதுமே பேசுபொருளாகவே இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி மற்ற உலக நாடுகள் கூட ஒரு பேட்ஸ்மேனைத் தான் கேப்டனாக நியமிக்கின்றனர். அதற்காக பௌலர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அவ்வப்போது சில பௌளலர்கள் நிரூபித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப்பை வென்ற அணியின் கேப்டனாக பௌலரான பேட் கம்மின்ஸ் தான் செயல்பட்டார்.

ஏன் எப்போதுமே பௌலர்கள் கேப்டன்ஷிப் பதவியில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை தனது காட்டமான பதில் மூலம் கிரிக்கெட் உலகிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் பெரும்பங்கு ஆற்றியவர் பௌலர் பும்ரா. ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும், ஹர்திக் பாண்டியாவை புறந்தள்ளி விட்டு சூர்யகுமார் யாதவிடம் கேப்டன்ஷிப் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், விமர்சனங்களும் குவிந்தன. இருப்பினும், பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறார்களா? பௌலர்கள் தெரியவில்லையா? என தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் பும்ரா.

பேட்ஸ்மேன்களை விடவும் பௌலர்கள் தான் களத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய விதிகள் கூட பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பௌலர்களை பந்தாடும் விதமாகவும் தான் இருக்கிறது. அதற்கேற்ப ரசிகர்களும் சிக்ஸர் அடிப்பதை பார்க்கவே விரும்புகிறார்கள். ஒரு பௌலரின் நல்ல பந்திற்கு இருக்கும் மரியாதை இங்கு குறைவு தான். மேலும், பேட்டர்களை விட அதிகமாக காயத்தில் சிக்குவதும் நாங்கள் தான். இத்தனை தடைகளையும் மீறி சாதிக்க களத்தில் இறங்கும் நாங்கள் ஏன் கேப்டன் பொறுப்பில் அணியை வழிநடத்திச் செல்லக் கூடாது என பும்ரா கேள்வியெழுப்பி உள்ளார்.

கேப்டன் பொறுப்பை எங்களுக்குத் தாருங்கள் என்று நாங்களாகவே சென்று கேட்க முடியாது. ஒருவேளை பௌலர்களுக்கு கேப்டன் பொறுப்பு சரிபட்டு வராது என்று நினைத்தால், வாய்ப்பொன்றை அளித்த பிறகு தானே முடிவை எடுக்க வேண்டும். எந்தவித வாய்ப்பும் கொடுக்காமல் பௌலர்களை எப்போதும் ஒதுக்கியே வைப்பது எந்த விதத்தில் நியாயம் என பும்ரா பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
"நான் இவரைத்தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதுகிறேன்" - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
Jasprit Bumrah

உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ், இம்ரான் கான், பேட் கம்மின்ஸ் ஆகியோர் பௌலர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே கூட இந்திய டெஸ்ட் அணியை சில போட்டிகளுக்கு கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவிற்கு கேப்டன்ஷிப் பதவி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2022-ல் பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். அப்போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை அடித்து அதிரடி பேட்டராகவும் தன்னை நிரூபித்தவர். கபில்தேவுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்திய வேகப்பந்து வீச்சாளரும் பும்ரா தான். இதுதவிர்த்து கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வெற்றி பெற்றதோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.

பும்ராவின் ஆதங்கத்தை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இனிவரும் காலங்களில் ஒரு பௌலர் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றால், அது யாராக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை மறக்காமல் கமெண்டில் பதிவிட்டுச் செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com