டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன், தான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த வீரர் யார் என்பதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயதைக் கடந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் உடனான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் இங்கிலாந்து அணியின் நலனைக் கருத்தில் கொண்டும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும் ஓய்வு பெறுகிறேன் என அவரே தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஓய்வு பெறும் போது, தான் எதிர்கொண்ட சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை அறிவிப்பது வழக்கமாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் யார் என்பதைத் தெரிவித்துள்ளார். இவரின் இந்தத் தகவலைக் கேட்ட இந்திய ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு ஏன் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என நினைக்கிறீர்களா? ஏனெனில் ஆண்டர்சன் குறிப்பிட்டு இருப்பது ஒரு இந்திய பேட்ஸ்மேன் அல்லவா! ஆம், ஆண்டர்சன் பந்துவீச மிகவும் சிரமப்பட்ட அந்த சிறந்த பேட்ஸ்மேன் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தான்.
சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் எடுத்து சாதனைப் படைத்தவர். ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் சச்சினை 9 முறை அவுட் செய்துள்ளார். மேலும், இவர் அதிகபட்சமாக இந்தியாவுக்கு எதிராக 149 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலம் விளையாடுவது சாதாரண ஒன்றல்ல. ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஃபிட்னஸ் தான் அவர் இத்தனை ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முக்கிய காரணம். 2002 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகி 22 ஆண்டுகளில் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக டெஸ்டில் விளையாடிய வீரரும் இவர் தான். வேகப்பந்து வீச்சாளர்களில் 700-க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் ஆண்டர்சன் தான்.
“என்னுடைய கிரிக்கெட் கேரியரில் சிறப்பான நிறைய சம்பவங்கள் உள்ளன. இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக நான் குவித்த 81 ரன்கள் தான் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக நினைக்கிறேன். இப்போது வரையிலும் கூட எப்படி அத்தனை ரன்கள் குவித்தேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் மிகவும் அபாரமான வீரர். நான் பந்து வீசியதிலேயே இவர் தான் மிகச்சிறந்த வீரர் என்று எனக்குத் தோன்றுகிறது” என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.