
விளையாட்டில் பாக்ஸிங் டே போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் உலகளவில் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. பாக்ஸிங் டே போட்டிகளில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பாக்ஸிங் டே-க்கும் என்ன தொடர்பு போன்ற சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸைக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டு, அடுத்த நாள் அனைவருக்கும் கிஃப்ட் பாக்ஸ்கள் வழங்கப்படுவது வழக்கம். கிஃப்ட் பாக்ஸ்களை வழங்குவதால் தான் டிசம்பர் 26 ஆம் நாள் பாக்ஸிங் டே என அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் கனடா போன்ற காமன்வெல்த் நாடுகளில் பல ஆண்டுகளாக இப்பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
கிஃப்ட் பாக்ஸ்களை வாங்கிய பொதுமக்கள் நேராக விளையாட்டுப் போட்டிகளைக் காணச் செல்வதும் வழக்கமான ஒன்று. இதனால் தான், பாக்ஸிங் டே அன்று பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. பாக்ஸிங் டே அன்று கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, கால்பந்து மற்றும் கைப்பந்து போன்ற சில விளையாட்டுகளும் நடைபெறும்.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் என்றால், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தை தவிர்க்கவே முடியாது. ஏனெனில் இதுவரை நடந்துள்ள 85 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 42 போட்டிகள் இங்கு தான் நடைபெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் அதிகளவில் நடந்துள்ளன.
1950 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முதல் பாக்ஸிங் டே போட்டியில் விளையாடின. அதன்பின், 1953 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. 1975 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மெல்பேர்ன் மைதானத்தில் குவிந்தனர். அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மெல்பேர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 1989 ஆம் ஆண்டு மட்டும் பாக்ஸிங் டே அன்று, டெஸ்ட் போட்டிக்குப் பதிலாக ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணியை எதிர்கொண்டது ஆஸ்திரேலிய அணி.
1987 ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதன் மூலம் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நடத்திய ஒரே இந்திய நகரம் என்ற பெருமையைப் பெற்றது கொல்கத்தா. இதுவரை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் மட்டும் இந்தியா 14 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவை பாக்ஸிங் டே போட்டிகளில் அதிகமுறை வீழ்த்திய அணி என்ற பெருமையைப் பெற்றது இந்தியா.
நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா வாகை சூடுமா அல்லது ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தன் பலத்தை நிரூபிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.