

21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்கள் உருவாக்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் பல்வேறு ஜாம்பவான் வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளார்.நவீன கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திறமையான ஏராளமான பேட்ஸ்மேன்கள் எளிதில் ஒவ்வொரு அணிக்கும் கிடைத்து விடுகின்றனர். ஆனால், சிறந்த பவுலர்கள் கிடைப்பது ஒவ்வொரு அணிக்கும் அரிதான ஒரு விஷயமாக இருக்கிறது.
ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை பந்துவீச்சாளர்களிடம் இருக்கிறது. எதிரணியை வீழ்த்துவதில் இவர்களின் பங்களிப்பு அதிகமாகும். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் இணைந்து 21 ஆம் நூற்றாண்டின் டாப் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து ஒருவர் மட்டுமே அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அந்த பட்டியலின்படி
1. ஷேன் வார்னே
சுழற்பந்து வீச்சின் அடையாளமாக இருந்த ஷேன் வார்னே , பல போட்டிகளில் தனது பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
2. ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வார்னேவின் சாதனைகளை கிட்டத்தட்ட நெருங்கி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் வேகப்பந்துவீச்சாளராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் செய்துள்ளார்.
3. ஜஸ்பிரீத் பும்ரா
இந்த பட்டியலில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் பும்ராவை சேர்த்தது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன் மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி பும்ரா 3 இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 234 விக்கட்டுக்களையும் , மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
4. மெக்ராத்
துல்லியமான பந்து வீசுவதற்கு புகழ்பெற்றவர் ஆஸ்திரேலியா அணியின் கிளென் மெக்ராத். இவரது பந்துவீச்சினை சமாளிப்பது எதிர் அணியின் வீரர்களுக்கு கடுமையான கஷ்டகாலமாக இருக்கும்.
5.கம்மின்ஸ்
ஸ்திரேலிய அணியின் கேப்டனும் அதிநவீன வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் , இக்கட்டான தருணங்களில் விக்கெட்டைகளை வைத்து எதிரணியை அசர வைப்பார்.
6. முத்தையா முரளிதரன்
இலங்கை அணியை சேர்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் , ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தி இமாலய சாதனை செய்துள்ளார். இலங்கை அணியை ஒரு காலத்தில் வெற்றிகரமாக வழி நடத்தியதில் முரளிதரனின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
7.டேல் ஸ்டெய்ன்
அசர வைக்கும் வேகத்தாலும், ஸ்விங் திறமையாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பல ஆண்டுகள் ஆதிக்கம் செய்த தென்னாப்பிரிக்காவின் புயல் வேக வீச்சாளர்.
8.ககிசோ ரபடா
இவரும் தென்னாப்பிரிக்க அணியின் வேகமான விக்கெட் வீழ்த்தும் கருவியாகத் திகழ்பவர். இதுவரை சர்வதேச போட்டிகளில் 500 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
9.வெர்னன் பிலாண்டர்
பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் சீம் நிலைத்தன்மையை கொண்டு டெஸ்ட் அரங்கில் தென்னாப்பிரிக்கா அணிக்கு பல வெற்றிகளை கொடுத்தவர்.
10.மிட்செல் ஸ்டார்க்
இடது கை வேகப்பந்து வீச்சின் மிரட்டலான யார்க்கர்கள் மற்றும் பவர்-பிளே விக்கெட்டுகளுக்காக அறியப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னணி போர்வீரன்.