பந்து வீச்சாளர் தரவரிசை: ‘நம்பர் ஒன்’அரியணையில் ஏறிய பும்ரா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரு இடம் ஏற்றம் கண்டு மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். பெர்த் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த பும்ரா, 45 புள்ளிகள் கூடுதலாக பெற்று மொத்தம் 883 புள்ளிகளுடன் அரியணையில் ஏறியுள்ளார். முதல் முறையாக கடந்த பிப்ரவரியில் முதலிடத்தை பிடித்த பும்ரா, அதன் பிறகு அக்டோபர் மாதத்திலும் குறைந்த நாட்கள் முதலிடத்தில் இருந்தார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா (872 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (860 புள்ளி) ஒரு இடம் குறைந்து 3-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4-ல் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கினார். இந்தியாவின் அஸ்வின் 4-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 7-வது இடத்திலும் உள்ளனர். பெர்த் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் முகமது சிராஜ் 3 இடம் உயர்ந்து 25-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் இரு இடங்களில் அஸ்வின், ஜடேஜா மாற்றமின்றி தொடருகிறார்கள்.
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் (903 புள்ளி) நீடிக்கிறார். இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 161 ரன்கள் குவித்ததன் மூலம், தரவரிசையில் கூடுதலாக 48 புள்ளிகள் பெற்று 825 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 6-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் விராட் கோலி 13-வது இடத்தை பெற்றுள்ளார்.