ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரால் மீண்டும் விளையாட முடியுமா?

Play Again Cricket
Retired Cricketers
Published on

உலக கிரிக்கெட்டில் கால மாற்றத்திற்கேற்ப பல வீரர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். பொதுவாக விளையாட்டில் ஓய்வு என்பது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நாம் அளிக்கும் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அவ்வகையில் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த வீரர், மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியுமா என்பதற்கு விடையளிக்கிறது இந்தப் பதிவு.

எந்த விளையாட்டாக இருந்தாலும் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு வீரர்கள் விளையாட நினைத்தால், உடற்தகுதியும், திறமையும் மிகவும் முக்கியம். நீண்ட காலத்திற்கு விளையாடிய ஒரு வீரர் ஓய்வு பெறத் திட்டமிடுவது, உடற்தகுதி குறைவதால் மட்டுமல்ல; அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு வழி விடுவதற்காகவும் தான். இருப்பினும் சில வீரர்கள் போதிய வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்திலும் விரக்தியில் ஓய்வை அறிவிப்பதுண்டு. இதற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடுவை உதாரணமாக கூறலாம். 2019 ஆம் ஆண்டு உலக்கோப்பை அணியில் பரிசீலிக்கப்பட்டு பிறகு தேர்வாகாததால் மனமுடைந்தார் ராயுடு. உலக்கோப்பை அணியில் இடம் பிடித்த விஜய் சங்கர் காயமடைந்த போதிலும், அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பளிக்காமல் மாற்று வீரரை தேர்வு செய்ததால், விரக்தியடைந்த அம்பத்தி ராயுடு ஓய்வை அறிவித்தார்.

ஒரு வீரர் ஓய்வை அறிவித்த பின், அந்த வீரரை தேர்வுக்குழு பரிசீலிப்பதில்லை. அவரால் அடுத்து வரும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. இருப்பினும் ஓய்வுபெற்ற வீரர் மீண்டும் அதே அணியில் விளையாட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கு தேர்வுக்குழு ஒத்துழைக்க வேண்டும்‌. அதே நேரத்தில் அவரது பங்களிப்பு அணிக்குத் தேவைப்படும் பட்சத்தில் அந்த வீரர் மீண்டும் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆஷஸ் தொடருக்கு முன்பாக மொயின் அலி ஓய்வை அறிவித்தார். இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாட வேண்டும் என மொயின் அலியை வலியுறுத்தினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆஷஸ் தொடரில் விளையாடினார் மொயின் அலி.

தென்னாப்பிரிக்கா அணியின் 360 டிகிரி பேட்டர் என அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்த பின்னர், உலக்கோப்பைத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆகையால் மீண்டும் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவரது விருப்பத்தை தென்னாப்பிரிக்க தேர்வுக்குழு நிராகரித்தது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டில் சாதிக்க ஃபிட்னஸ் முக்கியமா? திறமை முக்கியமா?
Play Again Cricket

சமீபத்தில் தான் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்த முடிவை ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தான் எடுக்க வேண்டும்.

டேவிட் வார்னருக்குப் பின் அவரது இடத்தை நிரப்ப முடியாமல் தவித்து வரும் ஆஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது. ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தனது பங்களிப்பை அளிக்கவில்லை. ஆகையால், டேவிட் வார்னரின் கோரிக்கையை ஆஸ்திரேலிய தேர்வுக்குழு வாரியம் ஏற்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com