மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் முதல் முறையாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் விளையாடுவதைப் பற்றியும் பேசினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அக்டோபர் 4 ஆம் தேதி அறிவித்தது .அதில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப் பட்டிருந்தார். பிசிசிஐயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் மற்றும் ரோஹித் இருக்கிறார்களா? எந்த சந்தேகம் அவர்களின் ரசிகர்களுக்கு இருந்து கொண்டிருந்தது.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியதை அடுத்து ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வந்துள்ளார். 37 வயதான ரோஹித் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் அணியினை வழிநடத்தி வென்று காட்டினார்.ஆயினும் வயது காரணமாக , இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் காம்பீரின் வழி காட்டுதலின்படி, சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது அணியின் அனுபவ வீரர்களின் எதிர்கால பங்களிப்பை பற்றி பல்வேறு யூகங்களை கிளப்பியது.
இது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுப்மன் கில் "ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் திறமையும் அனுபவமும் கொண்ட சிறந்த விளையாட்டு வீரர்கள் , அவர்களை போன்ற திறமை ஒரு சில வீரர்களிடம் மட்டுமே இருக்கும். இவர்களைப் போல அணியினை வெற்றி பெற வைத்தவர்கள் மிகவும் சிலர் தான். இது போன்ற திறமை , அனுபவம் , தரம் ஆகியவை உலகில் மிகச் சில வீரர்களிடம் மட்டுமே அது இருக்கிறது. அவர்கள் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இருக்கின்றனர்". என்று கூறினார்.
மேலும் ரோஹித்திடமிருந்து தான் கற்றுக்கொண்டது பற்றியும் சுப்மன் கில் பேசினார். போட்டி மனப்பான்மையுடன் குழுவில் பலர் இருந்தாலும், நட்பின் மதிப்பை ரோஹித்திடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ரோஹித்திடம் பல நல்ல குணங்கள் உள்ளன. அவர் வெளிப்படுத்தும் அமைதி மற்றும் குழுவில் அவர் கொண்டிருக்கும் நட்பு ஆகியவை, அவரிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் சிறப்பாக தலைமைப் பண்பை வெளிப்படுத்தினார். 5 போட்டிகளைக் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் 2-2 என்று சமன் செய்தார். தொடரில் 754 ரன்களை எடுத்த அவர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதையும் நிரூபித்தார்.சுப்மன் கில் புதிதாக கேப்டன் பதவி ஏற்றாலும் சீனியர் வீரர்கள் மீது அவர் கொண்ட மதிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி புதிய சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது. சுப்மன் கில்லின் கருத்துக்கள் தெளிவையும் நிலைத்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளன.