ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததாக கூறி உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் இரண்டு தொடர்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025ம் ஆண்டிற்கான உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் சென்ற வாரம் துவங்கியது. இந்த தொடரில் கார்ல்சன் இடம் பெற்றிருந்தார். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவர் இவரே. இவர் ஒன்பதாவது சுற்றில் விளையாடுவதற்கு தொடர் அரங்கிற்கு வந்தார். அந்த போட்டியில் கார்ல்சன் விதிமுறைக்கு மாறாக உடை அணிந்து வந்ததாக புகார் எழுந்தது.
இந்த தொடரின் விதிமுறைகளில் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது என்ற விதியும் இடம் பெற்று இருந்தது. ஆனால், போட்டி அரங்கிற்குள் மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்தார்.
அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவருக்கு 200 டாலர் அபராதம் விதித்தனர்.
அவர் பேன்டை மாற்றி வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். ஆனால், கார்ல்சன் நாளை வேறு பேன்ட் அணிந்து வருவதாகவும் இப்போது உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் கார்ல்சனும் உடையை மாற்றப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். இதை அடுத்து ஒன்பதாவது சுற்று போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர் உலக ராபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கார்ல்சன் பேசும்போது, தான் இந்த விதிமுறைகளால் சோர்ந்து போய்விட்டதாகவும், இனியும் இதை தான் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும், இது மிகவும் முட்டாள்தனமான கொள்கை எனவும் கூறினார்.
மேலும் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.
இது உலக செஸ் விளையாட்டு தரப்பினரிடையே பேசும்பொருளாக மாறியுள்ளது. ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு இப்படி ஒரு தடை விதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.