2024ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 2022ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வென்ற கோப்பையை காணவில்லை என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்திய அணி சிறந்த அணிக்கான நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பையை வென்றிருந்தது. கோப்பை வென்றப்பிறகு இரண்டு வருடங்கள் மட்டுமே கோப்பையை வைத்துக்கொள்ள இயலும்.
அதன்பின்னர் அந்தக் கோப்பையை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடமே ஒப்படைத்துவிட வேண்டும். அந்தக் கோப்பை இந்தமுறை வெற்றி பெரும் அணிக்கு வழங்கப்படும். இந்தநிலையில் தற்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பு கோப்பையை ஒப்படைக்குமாறு சில வாரங்களுக்கு முன் கேட்டது. அப்போதுதான் தெரிந்தது அந்த கோப்பை காணாமல் போன விஷயம்.
செஸ் ஒலிம்பியாட்டில் மொத்தம் 3 கோப்பைகள் வழங்கப்படும். செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் வெற்றி பெறும் அணி 'ஹாமில்டன்-ரசல் கோப்பை' வெல்லும்; பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணி 'வேரா மெஞ்சிக் கோப்பை' வெல்லும். ஒருங்கிணைந்த அளவில் வெற்றி பெறும் அணி 'நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பை'யை வெல்லும். இந்த அனைத்து கோப்பைகளுமே சுழற்சி முறையில்தான் வென்றவர்களுக்கு கொடுக்கப்படும்.
இப்போது இந்தியா வென்ற கோப்பையை காணவில்லை என்பதால், இந்தியா ஒரு தர்மசங்கடமான நிலையில் உள்ளது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தற்போது புதிதாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பழைய நிர்வாகிகள் மீது பல குற்றாச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், முறைகேடுகள் நடந்ததும் உறுதியானது. இந்தநிலையில் பழைய நிர்வாகிகள் இருந்த சமயத்தில் கோப்பை காணாமல்போனது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றப்பிறகே, அந்த கோப்பை நம்மிடம்தானே இருக்க வேண்டும் என்ற விஷயமே நினைவுக்கு வந்தது. கடைசியாக இந்த கோப்பை சென்னை ஹோட்டல் ஒன்றில் இருந்தது. இதனையடுத்து ஹோட்டல் முழுவதும் தேடப்பட்டது. செஸ் வீரர்களிடம் கூட கோப்பை குறித்து கேட்கப்பட்டது.
ஆனால், யாருக்கும் அந்த கோப்பை எங்கே உள்ளது என்பது தெரியவில்லை. 2022 செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்திய தமிழக அரசிடமும் இது குறித்து கேட்கப்பட்டு உள்ளது. தற்போது காவல்துறை இந்த கோப்பை குறித்து தீவிரமாக சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவதற்குள் கோப்பை கிடைக்கவில்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.