ஆப்கானிஸ்தானில் ஒலிக்கும் இந்தியரின் குரல் - யார் தெரியுமா இவர்?

Cricket Commentator
Devendra Kumar
Published on

கிரிக்கெட்டில் பெரும்பாலும் சில முன்னாள் வீரர்கள் வர்ணனையாளராக மாறுவதுண்டு. ஆனால் வர்ணனை செய்வதையே தொழிலாக எண்ணிய ஒரு இந்தியச் சிறுவனின் வெற்றிப் பயணத்தைப் பற்றி தெரியுமா உங்களுக்கு? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் பலரும் கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்க முக்கிய காரணமே வர்ணனை தான். கிரிக்கெட் மட்டுமல்ல வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் வர்ணனை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. வீரர்கள் விளையாடுவதை வர்ணிப்பது கூட ஒரு கலை தானே. இந்தக் கலையை உலகம் முழுக்க பலர் செய்து வருகையில், இந்தியாவைச் சேர்ந்தவர்களும் மிக அற்புதமாக வர்ணனை செய்கின்றனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுதர்புரம் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குமார். நம்மில் பலருக்கும் இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் போட்டிகளுக்கு முழுநேர வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இன்றைய இளம் தலைமுறையினர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு கூட எந்த வேலைக்குச் செல்வது, எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துடன் தான் இருக்கின்றனர். ஆனால் வர்ணனையாளராக ஆக வேண்டும் என தேவேந்திர குமார் கனவு காணத் தொடங்கிய போது அவருக்கு வயது 10 தான். ஒருமுறை ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியா பௌலர் காஸ்பரோவிக்ஸின் பந்தை சிக்சருக்கு அடித்தார். அப்போது வர்ணனை செய்த டோனி கிரேக்கின் வார்த்தைகளை கேட்டுத் தான் “இனி எனக்குத் தொழிலே வர்ணனை தான்” என முடிவு செய்தார் தேவேந்திர குமார்.

டோனி கிரேக்கின் அற்புதமான குரலும், ஆங்கில உச்சரிப்பும் இவரை பெரிதும் கவர்ந்தது. அதன்பிறகு மணிக்கணக்கில் வர்ணனையை பயிற்சி செய்தது மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளின் வர்ணனைகளையும் ரேடியோவில் கேட்டு வந்தார். என்ன தான் வர்ணனைப் பயிற்சிகளை மேற்கொண்டாலும், தொடக்க காலம் இவருக்கு எளிதாக அமையவில்லை. விளையாட்டுப் பின்புலம் இல்லாத சூழலில், சரியாக ஆங்கிலம் பேச வராததால் மிகவும் சிரமப்பட்டார். பிபிசி வானொலியில் வரும் “ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்” நிகழ்ச்சியைத் தான் அதிகமாக கேட்டு வளர்ந்தார்.

சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ளூர்ப் போட்டிகள் நடக்கும் போதெல்லாம் இவர் வர்ணனை செய்துள்ளார். அப்போது இவரை சிலர் கிண்டல் செய்துள்ளனர். இருப்பினும் ஒருசிலர் இவரது வர்ணனை ரசிக்கவும் செய்தனர். ஆங்கில உச்சரிப்பை வளர்த்துக் கொள்ள “வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா” நிகழ்ச்சியை அடிக்கடி கேட்டு வந்தார். 2009 ஆம் ஆண்டில் அப்போதைய ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி, இவரது வர்ணனை திறனைப் பார்த்து முறையான பயிற்சியை அளிக்க ஏற்பாடு செய்தார்.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 600 ரன்கள்: சாத்தியம் தானா?
Cricket Commentator

சிறு வயதிலிருந்தே தொடர்ந்த விடாமுயற்சி, கற்றுக் கொள்ளும் ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் தொழில் மீதான தெளிவு போன்றவை தான் தேவேந்திர குமாரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இவரது விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தான் இன்று, ஆப்கானிஸ்தான் விளையாடும் அனைத்து சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர்ப் போட்டிகளில் முழுநேர வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

சச்சின் சிகஸ் அடித்த அதே ஷார்ஜாவிலும் இவர் வர்ணனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சச்சின் விளையாடும் போது வர்ணனை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் இவருக்கு இன்றுவரை இருக்கிறது. ஒருவேளை லெஜன்ட்ஸ் கிரிக்கெட்டில் வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் இந்த ஏக்கம் தீர வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com