
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா நடத்த உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் மிக நீண்ட காலம் கழித்து கிரிக்கெட் விளையாட்டும் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளது. கிரிக்கெட் போட்டிகள் 2028 ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும். பதக்கப் போட்டிகள் ஜூலை 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. அனைத்துப் போட்டிகளும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள பொமோனா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா ஆறு அணிகள் போட்டியிட உள்ளன. மொத்தம் 180 வீரர்கள் இதில் கலந்துக் கொள்வார்கள். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வரை தேர்வு செய்யப்படுவார்கள். கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் டி20 வடிவத்தில் நடைபெறும்.
போட்டிகள் உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணி மற்றும் மாலை 6.30 மணிக்குத் தொடங்கும். ஜூலை 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எந்தப் போட்டிகளும் நடைபெறாது. இந்த ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்கப்படும் 5 விளையாட்டுகளின் ஒன்றாக டி20 கிரிக்கெட்டும் இருக்கும்.
1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இடம் பெறுவது இதுவே முதல் முறை. அப்போதைய ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்தும், பிரான்ஸ் நாடும் இரண்டு நாள் போட்டிகளில் மோதின. அதில் இங்கிலாந்து அணி தங்கப் பதக்கம் வென்றது. பின்னாளில் பிரான்ஸ் கிரிக்கெட் அணியின் நிலை என்னவென்று தெரியாமல் போனது. தற்போது ஒரு நூற்றாண்டு காலத்தையும் கடந்து கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறுகிறது. ஆனால், அதன் வடிவம் மாறியுள்ளது.
ஐரோப்பியர்கள் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தெற்காசிய பிராந்தியத்தில் கிரிக்கெட் முதன்மையான விளையாட்டாக உள்ளது. கால்பந்தை விட கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். கிரிக்கெட்டின் அந்தஸ்தை மதிக்கும் வகையில் ஒலிம்பிக்கில் நீண்ட காலமாக சேர்க்க பரிசீலனையில் இருந்தது.
அமெரிக்காவில் சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்திய 2024 டி20 உலகக் கோப்பையில் கிராண்ட் பிரேரி, லாடர்ஹில் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் பல போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ஃபேர்பிளெக்ஸ் மைதானம் கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த மைதானத்தில் நூற்றாண்டுக்கும் மேலாக இசை நிகழ்ச்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்துள்ளன.